அட… நாட்டுக்கோழி வைத்து சுவையான ஈரோடு ஸ்பெஷல் சிந்தாமணி சிக்கன்…!

சிந்தாமணி சிக்கன் கொங்கு நாட்டில் பிரபலமான ஒரு உணவு வகையாகும். காய்ந்த மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் போன்ற குறைவான பொருட்களை மட்டுமே வைத்து செய்யும் இந்த சிந்தாமணி சிக்கன் காரசாரமாக அட்டகாசமான சுவையுடன் இருக்கும். இதனை மிளகாய் கறி என்றும் சொல்லுவதுண்டு. இந்த சிந்தாமணி சிக்கன் பிராய்லர் மற்றும் நாட்டுக்கோழி என எந்த சிக்கனிலும் செய்யலாம். நாட்டுக்கோழியில் செய்யும் பொழுது கூடுதல் சுவையாக இருக்கும். வாருங்கள் நாட்டுக்கோழி வைத்து இந்த சிந்தாமணி சிக்கனை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

வாவ்…! சூப்பரான சிக்கன் கட்லெட்…. சிக்கன் எடுத்தால் இந்த சிக்கன் கட்லெட் ஒரு முறை செய்து பாருங்கள்…!

சிந்தாமணி சிக்கன் செய்வதற்கு முதலில் ஒன்றரை கிலோ நாட்டுக்கோழியை உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 150 கிராம் அளவு காய்ந்த மிளகாய்களை கிள்ளி அதில் உள்ள விதைகளை மட்டும் தனியாக எடுத்து விடுங்கள். இதற்கு விதை நீக்கிய பிறகே மிளகாய்களை பயன்படுத்த வேண்டும். இப்பொழுது கடாயில் 50 கிராம் அளவு கடலெண்ணெய் ஊற்றி இதில் நாம் கிள்ளி வைத்திருக்கும் காய்ந்த மிளகாய்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். காய்ந்த மிளகாய்களை வதக்கும்பொழுது 250 கிராம் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

பத்திலிருந்து 15 பல் பூண்டை தட்டி இதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும்படி வதக்கிக் கொள்ள வேண்டும். இவை மூன்றும் நன்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். காரம் தேவைப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம். சிக்கன் சுருள நன்கு வதக்கிய பிறகு சிக்கன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு இதனை மூடி போட்டு நன்கு வேக விட வேண்டும். இடையிடையே அவ்வபோது கிளறி விடவும்.

இரண்டு கைப்பிடி அளவு வரும்படி தேங்காய்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொஞ்சம் வற்றியதும் ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணையை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம். சிக்கன் நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறிதளவு கறிவேப்பிலையை பிய்த்து இதனுடன் சேர்த்து கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான கொங்கு நாட்டு ஸ்பெஷல் சிந்தாமணி சிக்கன் தயார்.

Exit mobile version