உருளைக்கிழங்கு என்றாலே சைடிஷ் தான் பலருக்கும் ஞாபகத்திற்கு வரும். உருளைக்கிழங்கு வறுவல், பொரியல், மசாலா என்று மட்டுமில்லாமல் உருளைக்கிழங்கை வைத்து குழம்பு செய்தாலும் அது சுவையாக இருக்கும். அதுபோன்ற ஒரு ரெசிபி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு போட்டு செய்யும் இந்த குழம்பு சூடான சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். மேலும் புளி சேர்க்காமல் செய்யும் இந்த குழம்பு இட்லி, தோசை என அனைத்திற்கும் சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த கத்தரிக்காய் உருளைக்கிழங்கு குழம்பை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
சைவ, அசைவ அனைத்து குழம்பு வகைகளுக்கும் இந்த ஒரு குழம்பு தூள் போதும்!
இந்த குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கடுகு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இதனுடன் 15 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி முழுதாக சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் சேர்த்தவுடன் 10 பல் பூண்டையும் சேர்த்து இரண்டையும் நன்றாக வதக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். சிறிதளவு கறிவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு மிக்ஸி ஜாரில் மூன்று தக்காளிகளை நறுக்கி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும் அந்த விழுதை இப்பொழுது வெங்காயத்துடன் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
இப்பொழுது மூன்று கத்தரிக்காய் நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் நீளவாக்கில் நறுக்கிய மூன்று உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை எண்ணெயில் நன்கு வதக்கி விடவும். பிறகு அரை ஸ்பூன் சீரகத்தூள், இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும். இப்பொழுது ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி இதனை மூடி கொதிக்க விட வேண்டும். 10 நிமிடங்கள் நன்கு கொதித்த பிறகு இதனை சூடாக பரிமாறலாம்.