சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை வைத்து சுவையான கீரை பொரியல் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர் வரை கட்டாயம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உணவுப்பொருள்தான் கீரை. கீரையில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒரு முக்கியமான கீரை தான் அரைக்கீரை. அரைக்கீரை சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு பொருளாகும். அரைக்கீரையில் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின்கள் என அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. மேலும் கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கல்லீரல் பாதிப்பிலிருந்து விடுபட முடியும். சத்துக்கள் நிறைந்த கீரையை வைத்து எப்படி நிறம் மாறாமல் கீரை பொரியல் செய்வது என்பதை பார்ப்போம்.

உடல் வலிமையை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சூப்! ஆரோக்கியம் நிறைந்த இந்த சூப்பை செய்வது இத்தனை சுலபமா!

கீரை பொரியல் செய்வதற்கு முதலில் ஒரு கட்டு கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தண்ணீரில் நன்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு ஆக்கியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். கடுகு பொரிந்து உளுந்து மற்றும் கடலைப்பருப்பின் நிறம் மாறியதும் மூன்று வர மிளகாய்களை உடைத்து சேர்த்து அதையும் நன்கு எண்ணெயில் வறுத்துக் கொள்ள வேண்டும். பத்திலிருந்து பதினைந்து பூண்டு பற்களை சேர்த்து பூண்டின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

இப்பொழுது சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையை சேர்க்க வேண்டும் கீரையை வேக வைக்க தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. கீரையில் உள்ள தண்ணீரே போதுமானது. மேலும் கீரையை மூடி போட்டு வேக வைக்கக் கூடாது. மூடி போட்டு வேக வைப்பதால் கீரை நிறம் மாறிவிடும் எனவே திறந்த வாணலியிலேயே இதனை நன்கு கிளறி வேக வைக்க வேண்டும். அதேபோல் நறுக்கிய கீரையை பார்ப்பதற்கு நிறைய இருப்பது போல் தோன்றும். ஆனால் இதனை சமைக்கும் பொழுது வெந்து சுருங்கிவிடும். எனவே உப்பு சேர்க்கும் பொழுது பாதி வெந்த பிறகு உப்பை சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. நிறைய கீரை இருக்கிறது என கூடுதலாக உப்பை சேர்த்து விடாமல் கீரை வெந்து சுருங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக தேங்காய் பூவை தூவி பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான சத்துக்கள் நிறைந்த கீரை பொரியல் தயாராகி விட்டது…!