கொஞ்சம் கூட அரிசி சேர்க்காமல் முழுக்க முழுக்க சிறுதானியம் வைத்து பணியாரம் சாப்பிட வேண்டுமா? ரெசிபி இதோ…

பெரும்பாலும் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் அரிசி உணவை தவிர்த்து வருகின்றனர். அதற்கு பதிலாக சிறுதானியத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் கம்பு தானியம் உணவில் அதிகமாக சேர்க்கும் பொழுது உடல் எடை குறைப்பதற்கு எளிமையாகவும் மிகவும் உதவியாகவும் இருக்கிறது. இந்த கம்பு மாவு வைத்து அருமையான பணியாரம் செய்வதற்கான ரெசிபியை இதில் பார்க்கலாம்…

முதலில் பணியாரம் செய்வதற்கு மாவு தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு கப் கம்பு தானியத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் கம்பு மாவிற்கு அரை கப் உளுந்து எடுத்துக் கொள்ளலாம்.

அதன்படி அரை கப் உளுந்து, ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். உளுந்து மற்றும் கம்பு இவை இரண்டையும் தனித்தனியாக குறைந்தது மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

மூன்று மணி நேரம் கழித்து உளுந்து மற்றும் வெந்தயத்தை இட்லி மாவு பதத்திற்கு ஆட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக கம்பை நன்கு மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவு குறைந்தது 8 மணி நேரம் புளிக்க வேண்டும். அப்பொழுதுதான் பணியாரம் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

காய்கறிகள் வதங்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது தாளிப்பு தயாராக உள்ளது. 8 மணி நேரத்திற்கு பின் மாவு நன்கு புளித்ததும் இந்த தாளிப்பை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மாவுடன் வாசனைக்காக பொடியாக நறுக்கிய ஒரு கப் கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறினால் மாவு வாசனையாக இருக்கும்.

இப்பொழுது பணியார கல்லை அடுப்பில் வைத்து விதமாக தீயில் சூடுபடுத்த வேண்டும். பணியாரம் செய்வதற்கு நெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். அதன்படி குழிகளின் பாதி அளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் நம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை அதன் மேல் ஊற்ற வேண்டும்.

ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு இது ஒன்று போதும்… வேண்டும் வேண்டும் என சொல்லும் அளவிற்கு சாப்பிடத் தூண்டும் கேரளா ஸ்பெஷல் தேங்காய் பால் இறால் கறி!

மிதமான தீயில் மாவு ஒரு பக்கம் பணியாரமாக வெந்து வந்ததும் மற்றொரு பக்கம் மாற்றி மீண்டும் வேக வைக்க வேண்டும். இன்னும் பின்னும் பொன்னிறமாக மாறியதும் ஒரு தட்டிற்கு மாற்றிவிடலாம். இப்பொழுது சுவையான கம்பு மாவு பணியாரம் தயார். உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த பணியாரத்தை மாலை நேரங்களில் சாப்பிட்டு வரலாம். இந்த பணியாரத்துடன் பொட்டுக்கடலை சட்னி, தக்காளி சட்னி வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.