மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் மிருதுவான பால் கொழுக்கட்டை!

விசேஷ நாட்களில் நம் வீட்டில் செய்யும் தனித்துவமான இனிப்பு வகைகள் என்றும் சிறப்புதான். அதில் ஒன்றுதான் பால் கொழுக்கட்டை. இந்த பால் கொழுக்கட்டை சாப்பிடுவதற்கு தித்திப்பாகவும், மிருதுவாகவும் குழந்தைகளுக்கு பிடிக்கும் விதத்திலும் அமைந்திருக்கும். எளிதில் ஜீரணம் ஆகும் இந்த பால் கொழுக்கட்டை நம் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வதற்கான அருமையான ரெசிபி இதோ….

பால் கொழுக்கட்டை செய்வதற்கு ஒரு கப் அரிசி மாவை முதலில் இட்லி பாத்திரத்தில் வெறுமையாக சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி ஆவியில் வேக வைக்கும் பொழுது அரிசி மாவில் தண்ணீர் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. உதிரியாக இருக்கும் மாவை அப்படியே இட்லி தட்டில் சேர்த்து நான்கு நிமிடம் நீராவியில் வேக வைத்தால் போதுமானது.

அதன் பின் அந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி அதில் கட்டிகள் இல்லாத வண்ணம் பிரித்துக் கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீர் கொண்டு மாவை பிசைந்து கொள்ள வேண்டும். தண்ணீரை மொத்தமாக சேர்த்து பிசையாமல் சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

மொத்தமாக தண்ணீர் சேர்க்கும் பொழுது சில நேரங்களில் மாவு கெட்டியாக மாற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தண்ணீர் நன்கு கொதிக்கும் பக்குவத்தில் இருக்க வேண்டும். சூடு குறைவாக உள்ள தண்ணீரில் நாம் மாவு பிணைந்தால் பால் கொழுக்கட்டை மிருதுவாக இருக்காது.

சப்பாத்தி மாவு பதத்திற்கு அரிசி மாவை நன்கு பிணைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கப் வெல்லத்திற்கு அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு கடாயில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நாம் உருண்டைகளாக பிடித்து வைத்திருக்கும் அரிசி மாவை அதில் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

வறுத்து அரைத்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு!

ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடலாம். அதன் பின் சிறிது நேரம் கழித்து வெல்ல பாகை அரிசி மாவு உருண்டைகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் பால் கொழுக்கட்டை கெட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக அரை கப் தேங்காய் பால் சேர்த்து கலக்க வேண்டும்.

மேலும் வாசனைக்காக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக இவை அனைத்தையும் ஒரு சேர கலந்து இறக்கினால் சுவையான பால் கொழுக்கட்டை தயார். செய்வதற்கு எளிமையாக இருக்கும் இந்த பால் கொழுக்கட்டை உடலில் எளிதில் ஜீரணம் ஆகி உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது.

Exit mobile version