பொதுவாக அசைவம் சாப்பிடாதவர்கள் கறி குழம்பு சுவையிலேயே சைவ குழம்புகள் வைத்து சாப்பிடுவது வழக்கம். அதற்காக பெரும்பாலும் உருளைக்கிழங்கு,மீல்மேக்கர் போன்றவற்றை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். இந்த முறை சற்று வித்தியாசமாக முள்ளங்கி வைத்து கறிக்குழம்பு சுவையில் முள்ளங்கி குழம்பு செய்து சாப்பிடலாம் வாங்க.
ஒரு குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை இரண்டு துண்டு, லவங்கம் 2 துண்டு, ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த தக்காளி பழம் ஒன்றை பொ டியாக நறுக்கி குக்கரில் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
தக்காளி நன்கு வதங்கியதும் நாம் கழுவி சுத்தம் செய்து வட்ட வடிவில் நறுக்கி வைத்திருக்கும் ஒரு கப் முள்ளங்கி சேர்த்து வதக்க வேண்டும். முள்ளங்கி பாதி வதங்கியதும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒன்றரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொடுத்து குக்கரை மூடி விடவும்.
குக்கரில் இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.விசில் வரும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி கசகசா, ஐந்து பல் வெள்ளை பூண்டு, , அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பேமஸ் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்கும் பட்டர் தந்தூரி சிக்கன்! அசத்தலான ரெசிபி இதோ…
குக்கரில் விசில்கள் வந்து அழுத்தம் குறைந்ததும் திறந்து ஒருமுறை கலந்து கொடுக்க வேண்டும். அதில் பாதி எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி கரைசலை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்கு கொதித்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான முள்ளங்கி கறி குழம்பு தயார். இறுதியாக பரிமாறுவதற்கு முன் பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.