சுலபமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி! சட்டுனு செய்யலாம் சுவையான சீரக சாதம்…!

லஞ்ச் பாக்ஸுக்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பபவர்களுக்கு சட்டென்று செய்யக்கூடிய ஒரு சுலபமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி சீரக சாதம். இந்த சீரக சாதம் மிக எளிமையாக செய்துவிடலாம். சுவையும் அட்டகாசமாக இருக்கும். இந்த சீரக சாதத்திற்கு பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் சிக்கன், சிக்கன் கிரேவி என அனைத்து சைட் டிஷ் களும் அற்புதமாக இருக்கும். வாருங்கள் சுலபமான இந்த சீரக சாதத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

குழந்தைகள் லஞ்ச் பாக்ஸுக்கு வித்தியாசமான இந்த புதினா சாதத்தை செய்து பாருங்கள்!

சீரக சாதம் செய்வதற்கு முதலில் குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் உருகியதும் இதில் இரண்டு ஏலக்காய், மூன்று கிராம்பு, ஒரு பட்டை, ஒரு பிரியாணி இலை போன்ற பொருட்களை வாசனைக்காக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றோடு இரண்டு டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்க்க வேண்டும். மூன்று பச்சை மிளகாய்களை கீறி அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் சேர்த்த பிறகு ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசியை சேர்த்து சிறிது கிளறி கொள்ள வேண்டும். ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும். குக்கரை மிதமான சூட்டில் ஒரு விசில் வரும் வரை வைக்கவும். தனியாக ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து இந்த எண்ணெயில் நடுத்தர அளவிலான ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதனோடு சிறிதளவு முந்திரிப் பருப்பையும் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் விசில் வந்து அடங்கியதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் முந்திரி இதன் மேல் தூவி சாதம் உடையாமல் மெதுவாக கிளறி விட வேண்டும். கொத்தமல்லி தழையையும் தூவி விடவும். அவ்வளவுதான் மணமணக்கும் சீரக சாதம் சட்டென்று தயாராகி விட்டது.