இந்த நவீனமான வாழ்க்கை முறையில் பலருக்கு உடல் அதிகரிப்பு என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது, கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, முறையான தூக்கம் இன்மை போன்ற பல காரணங்களினால் நம்மில் பலருக்கு உடல் எடை அதிகரிக்க துவங்குகிறது. இதை நாம் கட்டுக்குள் வைக்க உணவில் சில மாற்றங்களை செய்தால் போதுமானது.. இந்த வகையில் சிறு தானியங்களில் ஒன்றான குதிரைவாலி வைத்து அருமையான கஞ்சி ரெசிபி செய்வதற்கான விளக்கம் இதோ…
இந்த குதிரைவாலி கஞ்சியை வாரத்தில் நான்கு முதல் ஐந்து முறை காலை உணவாக எடுத்து வரும் பொழுது நீண்ட நேரம் பசியின்மையை உணர்ந்து வயிறை திருப்தியாக வைத்திருக்கும். மேலும் உடல் உள்ள தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றவும் பெரிதும் உதவுகிறது.
இந்த கஞ்சி செய்வதற்கு ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு கைப்பிடி அளவு வெள்ளை பூண்டுமற்றும் ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது 15 முதல் 20 வெள்ளை பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக ஒரு சிறிய துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி அடுத்து பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது வாசனைக்காக கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம்.
இந்த கஞ்சி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே குதிரைவாலி அரிசியை ஊற வைத்திருக்க வேண்டும். அப்படி ஊற வைத்திருந்த குதிரைவாலி அரிசியை இப்பொழுது சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் குதிரைவாலி அரிசிக்கு ஆறு கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் இந்த கலவையை கொதிக்க விட வேண்டும். ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடிவிட வேண்டும். குறைந்தது ஐந்து முதல் ஏழு விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான குதிரைவாலி கஞ்சி தயார். இந்த கஞ்சி வைத்த அதே ரெசிபியில் சிறு தானிய வகைகள் ஆன சாமை, வரகு, கம்பு என மற்ற தானியங்கள் வைத்தும் இதே போல் கஞ்சி செய்யலாம்.
உடலுக்கு குளிர்ச்சி மற்றும் பல எதிர்ப்பு சக்திகளை அள்ளித் தரும் இந்த சுவையான கஞ்சியை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலமாக உடல் எடை குறைத்து நல்ல வலுப்பெற முடியும்.