அருமையான கதம்ப சட்னி…! இந்த சட்னி ஒரு முறை செஞ்சு பாருங்க உங்க வீட்ல எல்லாரும் அசந்து போய்டுவாங்க..!

கதம்ப சட்னி என்பது கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி, பருப்பு வகைகள், தக்காளி வெங்காயம் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு அருமையான கலவை சட்னியாகும். அனைத்து பொருட்களையும் வதக்கி அரைத்து செய்யப்படும் இந்த கதம்ப சட்னி மிக சுவையானதாக இருக்கும். இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் ஏற்றபடி இருக்கும் இந்த கதம்ப சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இரண்டே நிமிடத்தில் ஈஸியா செய்யலாம் பொட்டுக்கடலை சட்னி…!

கதம்ப சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிதளவு கட்டிப் பெருங்காயத்தை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 2 டேபிள் ஸ்பூன் அளவு கடலைப்பருப்பை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு உளுத்தம் பருப்பை சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்கு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பிறகு இதனை வேறொரு தட்டில் எண்ணெயை வடித்து மாற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஐந்து பல் பூண்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவை ஓரளவு வறுபட்டவுடன் இதனுடன் ஆறு பச்சை மிளகாய், 5 வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சிறிதளவு புளி மற்றும் இரண்டு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து இதனை நன்கு வதக்க வேண்டும்.

சுவையான காரசாரமான பூண்டு சட்னி…! இட்லி தோசைக்கு இந்த சட்னி செய்து அசத்துங்கள்!

இந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய ஒரு பழுத்த தக்காளியை சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை இதனை வதக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை, ஒரு கைப்பிடி அளவு புதினா ஆகியவற்றை சேர்க்கவும். புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவை சுருளும் அளவிற்கு வதக்கிக் கொள்ள வேண்டும். புதினா மற்றும் கொத்தமல்லி நன்கு சுருள வதங்கியதும் இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் துருவல் மற்றும் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.

இது நன்கு ஆற வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் பருப்பு வகைகளை சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள் நன்றாக பொடியானதும் இதனுடன் வதக்கி வைத்திருக்கும் தக்காளி வெங்காயம் மசாலாக்களை சேர்த்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அதையும் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு தாளிக்கும் கரண்டியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, ஒரு வரமிளகாய், சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து அதனை சட்னியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான கதம்ப சட்னி தயார்…!