கொத்தமல்லித்தழை நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக இருக்க இந்த டிப்ஸ்களை பாலோ செய்து பாருங்கள்!

நாம் நம்முடைய சமையலில் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு உணவு பொருள் கொத்தமல்லி தழை. சட்னி வகைகள், குழம்பு வகைகள், கலவை சாதம், பிரியாணி என எந்த உணவு செய்தாலும் அது கொத்தமல்லித்தழை இல்லாமல் நிறைவடையாது. இறுதியில் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கினால் தான் அந்த உணவே சுவை நிறைந்ததாக இருக்கும். ரசம் உள்ளிட்ட பல உணவுகளுக்கு வாசமே கொத்தமல்லித்தழை தான். இந்த கொத்தமல்லி தழை தினமும் கடைக்குச் சென்று நாம் வாங்க முடியாது. சந்தைக்குச் செல்லும் பொழுது வாங்கி அதை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்தாலும் நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக இருக்காது. உடனே வதங்கிவிடும். கொத்தமல்லி தழையை எப்படி சேமித்து வைப்பது என்பது பலருக்கும் குழப்பமாக இருக்கலாம். இனி கவலை வேண்டாம். இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து கொத்தமல்லியை ஸ்டோர் செய்து பாருங்கள். நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக இருக்கும்.

கொத்தமல்லி தழை வாங்கியதும் முதலில் அதில் ஏதேனும் அழுகிய இலைகள் அல்லது தண்டுகள் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் அவற்றை நீக்கி முதலில் சுத்தம் செய்து விடுங்கள். தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு அலசி விடுங்கள்.

தண்ணீரில் கொத்தமல்லி தழைகளை அலசிய பிறகு சுத்தமான டவல் கொண்டு அதில் உள்ள ஈரத்தை எடுத்து விடுங்கள். ஈரத்துடன் நாம் இதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. அல்லது டவலில் வைத்து சிறிது நேரம் ஃபேனிற்கு கீழே வைத்து விடுங்கள்.

இப்பொழுது ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கொள்கலனின் அடிப்பரப்பில் ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து அதன் மேல் கொத்தமல்லி தழையை வைத்து மீண்டும் டிஷ்யூ பேப்பரால் கொத்தமல்லி தழையை அந்த கொள்கலனின் மூடியை போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள். இப்படி வைப்பதால் கொத்தமல்லித்தழை வாரக்கணக்கில் பிரஷ்ஷாக இருக்கும்.

மற்றொரு முறையாக கொத்தமல்லி தலையை சுத்தம் செய்த பிறகு ஒரு கண்ணாடி ஜாரில் அடிப்பகுதியில் மட்டும் தண்ணீர் இருக்கும்படி நிரப்பி கொள்ளவும். இப்பொழுது கொத்தமல்லி தழையில் தண்டு பகுதி தண்ணீரில் இருக்கும்படி வைக்கவும். இலைப்பகுதி மேலே இருக்கும் படி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிப் லாக் கவரை எடுத்து இந்த கண்ணாடி பாத்திரத்தின் மேல் மூடி இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து விடலாம். இப்படி வைப்பதால் ஒரு வாரம் வரை இந்த கொத்தமல்லி தழை கெடாமல் இருக்கும்.