சாம்பார் பொடி இப்படி வீட்டில் நீங்களே தயாரித்து பாருங்கள்… ஒரு போதும் கடையில் இனி வாங்க மாட்டீர்கள்…

தென்னிந்திய உணவுகளில் பெரும்பாலும் மசாலாக்கள் சேர்த்து சமைக்கக்கூடிய உணவுகள் தான் அதிகம். மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, சாம்பார் பொடி, குழம்பு மிளகாய்த்தூள் என பலவிதமான மசாலாக்களை நாம் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் இவற்றை கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே புதிதாக மசாலா பொருட்களை வாங்கி வறுத்து நாமே அரைக்கும் பொழுது அது கூடுதல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி எந்தவித கலப்படமும் இல்லாமல் சுத்தமானதாகவும் இருக்கும். இப்படி எந்தவித கலப்படமும் இல்லாமல் மணமணக்கும் சாம்பார் வைக்க தேவையான சாம்பார் பொடி நாமே வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

சாம்பார் சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்… செய்த சாதம் கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதை ஒவ்வொரு முறை சாம்பார் வைக்கும் பொழுதும் அரைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருமுறை அரைத்து இதனை காற்று புகாதபடி இறுக மூடி வைத்து விட்டால் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் உங்களுக்கு மிக அதிகமாக இருப்பதாக தோன்றினால் உங்கள் வீட்டின் நபர்களுக்கு தகுந்தாற்படி அளவினை பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள்.

இந்த சாம்பார் பொடிக்கு ஒரு கிலோ நீளமான வர மிளகாய் எடுத்து அதன் காம்பினை நீக்கி சுத்தம் செய்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மல்லி விதைகளை ஒரு கிலோ வறுத்து எடுத்து தனியே தட்டில் சேர்க்கவும். இரண்டு மேசை கரண்டி வெந்தயம், இரண்டு மேசை கரண்டி மிளகு, இரண்டு மேசை கரண்டி சீரகம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியாக வறுத்தெடுக்க வேண்டும். இப்பொழுது ஒரு மேசை கரண்டி அளவு சோம்பையும் வறுத்துக் கொள்ளலாம். 250 கிராம் அளவு துவரம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசி ஆகியவற்றையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 75 கிராம் உளுத்தம் பருப்பு, 50 கிராம் பெருங்காயத்தூள் (கட்டிப் பெருங்காயமாகவும் பொறித்து எடுத்துக் கொள்ளலாம்) ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். 100 கிராம் விரலி மஞ்சளையும் இதனோடு தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். வறுக்கும் பொழுது எதையும் கலக்கி விடாமல் கவனமாக வறுக்க வேண்டும்.

தனித்தனியாக வறுத்து எடுத்த இந்த மசாலா பொருட்களை ஒன்று சேர்த்து நன்கு ஆறவிட வேண்டும். ஆரிய பின்பு இதனை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளலாம். அரைத்த பின்பு மசாலாக்களை சலித்து காற்று புகாதவாறு ஒரு பாத்திரத்திலோ, கண்ணாடி குடுவையிலோ இறுக மூடி வைக்க வேண்டும். எப்பொழுதும் இதனை ஈர கரண்டி கொண்டோ அல்லது ஈர கைகளினாலோ எடுத்து விடக்கூடாது ஈரம் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கத்தரிக்காய் இருந்தால் ஒரு முறை இந்த கோஸ் மல்லி செய்து பாருங்கள்… இடியாப்பம், தோசைக்கு சூப்பரான கோஸ் மல்லி!!

இந்த சாம்பார் பொடியை பயன்படுத்தி நீங்கள் சாம்பார் வைத்தால் வீடே மணக்கும்.. ருசியும் அற்புதமாக இருக்கும்!