முடக்கத்தான் கீரை இதன் பெயரிலேயே முடக்கு அறுத்தான் அதாவது முடக்குவாத பிரச்சனைகளை வேரறுக்க கூடிய கீரை என்ற பெயரை கொண்டுள்ளது. இந்தக் கீரைக்கு மூட்டு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை முற்றிலும் ஒழித்து விடக் கூடிய ஆற்றல் உண்டு. ஏராளமான விட்டமின்களும், தாதுக்களும் முடக்கத்தான் கீரையில் நிறைந்துள்ளது. மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த முடக்கத்தான் கீரை சிறந்த தீர்வு.
நாள்பட்ட சளி இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த முடக்கத்தான் கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்து வந்தால் போதும் சளி தொல்லையில் இருந்து நிரந்தரமாக வெளிவர முடியும். இந்த முடக்கத்தான் கீரையை வைத்து செய்யும் ரசம் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.
முடக்கத்தான் கீரை ரசம் செய்யும் முறை:
நன்கு பழுத்த ஒரு தக்காளியை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை பல அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை அரைத்து எடுத்துக் கொள்ளவும். இவற்றை அரைத்த பின்பு கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஐந்து பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.
அத்துடன் ஒரு கட்டு முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து கொத்தமல்லி தழையோடு சேர்த்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது புளித் தண்ணீரில் நறுக்கிய தக்காளியை கரைத்து அரைத்து வைத்திருக்கும் விழுதினை அதில் சேர்க்க வேண்டும்.
தேவையான அளவு உப்பினை இந்த கரைசலில் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி கொள்ள வேண்டும். இதனுடன் மூன்று காய்ந்த மிளகாய் அரை ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
தாளித்த பின்பு கரைத்து வைத்த கரைசலை இந்த தாளிப்போடு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த ரசம் நன்கு கொதித்த பின்பு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
அவ்வளவுதான் சுவையான உடலுக்கு நன்மை தரக்கூடிய முடக்கத்தான் கீரை ரசம் தயார்…!