சப்பாத்தி இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு உணவாகும். இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் சப்பாத்தி, ரொட்டி, புல்கா போன்ற உணவுகள் மிகப் பிரபலமாக இருக்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை வட இந்தியாவில் அதிக சப்பாத்தி உணவுகள் பலரால் உண்ணப்படுகிறது. தென்னிந்தியாவிலும் இப்பொழுதெல்லாம் சப்பாத்தி சில இடங்களில் தினசரி உணவாகிவிட்டது. சப்பாத்தி மிருதுவாக, மென்மையாக, வாயில் வைத்ததும் கரையும் அளவிற்கு இருக்க வேண்டும் என பலருக்கும் விருப்பம் தான். ஆனால் சிலருக்கோ சப்பாத்தி மிக கடினமானதாக, ரப்பர் போல மாறிவிடுகிறது. என்னதான் மாவு நன்றாக பிசைந்தாலும் சப்பாத்தி மிருதுவாக வருவதே இல்லை என கவலை கொள்பவரா நீங்கள் இனி அடுத்த முறை சப்பாத்தி செய்யும் பொழுது இந்த டிப்ஸ்களில் ஒன்றை பாலோ செய்யுங்கள் நிச்சயம் உங்கள் சப்பாத்தி மிக மிருதுவாக வரும்.
சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு அட்டகாசமான வெஜிடபிள் குருமா…!
முதலில் சப்பாத்திக்கான தண்ணீர் எவ்வளவு தேவை என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். சப்பாத்திக்கான மாவு பிசையும் பொழுது அதிக தண்ணீராகவும் இருக்கக் கூடாது அதே சமயம் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. மாவு பிசைந்த பின்பு அந்த மாவினை விரல்களால் தொட்டால் நன்கு அமுங்கும் படி இருக்க வேண்டும். சப்பாத்தி மாவிற்கான தண்ணீர் அளவு ஒவ்வொரு மாவிற்கும் வேறுபடும். ஆனால் பொதுவாக இரண்டு கப் மாவிற்கு ஒரு கப் தண்ணீர் என்பது சரியான அளவாக இருக்கும்.
சப்பாத்தி மிருதுவாக வருவதற்கு கடைகளில் வாங்கும் மாவு தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே கோதுமை வாங்கி அரைத்தும் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் அரைத்த மாவை நன்கு சலித்து கொள்ள வேண்டும். மாவு எந்த குருணைகளும் கட்டிகளும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.
சப்பாத்திக்கு மாவு தயாரிக்கும் பொழுது கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி மாவு தயாரிக்கலாம்.
- ஒரு கப் கோதுமை மாவுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு மைதா மாவு, அரை ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து மாவு பிசைய மாவு நன்கு மென்மையாக இருக்கும்.
- மைதா மாவு உடலுக்கு தீங்கு என மைதா மாவு வேண்டாம் என நினைப்பவர்கள் முட்டையின் வெள்ளை கருவை இதனுடன் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளலாம்.
- சப்பாத்தி மாவு பிசையும் பொழுது முட்டையை விரும்பாதவர்கள் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்தும் இந்த மாவினை பிசைந்து கொள்ளலாம். சர்க்கரை சேர்ப்பதால் மாவு ஆங்காங்கே பழுப்பு நிறத்தில் அழகாக வெந்து வரும்.
- சாதாரண தண்ணீரில் மாவு பிசைவதற்கு பதிலாக கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரோடு இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவு பிசைந்தால் சப்பாத்தி மாவு மிக மிருதுவாக இருக்கும்.
- சப்பாத்தி மாவோடு இரண்டு ஸ்பூன் நெய்யை சூடு செய்து சேர்த்து பிசைய மாவு மிக மிருதுவாக இருக்கும்.
மாவு பிசைந்த பிறகு அதனை ஒரு துணியைக் கொண்டு காற்று புகாதவாறு மூடி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். அதன் பிறகு சம அளவில் உருண்டைகளாக உருட்டி தேய்த்துக் கொள்ளலாம் அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்காமல் மென்மையாக தேய்க்க வேண்டும்.
நன்கு காய்ந்த கல்லில் மிதமான சூட்டில் இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும். மென்மையாக மாவு பிசைந்து சப்பாத்தி போடும் பொழுது கல்லில் உள்ள சப்பாத்தியின் மீது லேசாக ஒத்தி எடுத்தால் சப்பாத்தி நன்கு உப்பி வருவதை பார்க்கலாம்.
மீதமான சப்பாத்தி வைத்து அருமையான வெஜ் சப்பாத்தி நூடுல்ஸ்!
அவ்வளவுதான் மிருதுவான சப்பாத்தியை நீங்களே வீட்டில் செய்து விடலாம்.