தோசை அனைவருக்கும் பிடித்த ஒரு டிபன் வகை ஆகும். சாதா தோசையில் ஆரம்பித்து வெங்காய தோசை, கறி தோசை, முட்டை தோசை, கோன் தோசை, பொடி தோசை இப்படி தோசையிலேயே பல வகையான தோசைகள் உண்டு. என்னதான் நான் ஸ்டிக் தவாவில் தோசை ஊற்றி எடுத்தாலும் பலருக்கு இரும்பு கல்லில் தோசை ஊற்றி சாப்பிடுவது தான் மிகவும் பிடிக்கும். கல்லில் ஊற்றும் போது தோசையின் மனமும் சுவையும் கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த கல்லில் ஊற்றும் போது பெரும்பாலும் ஏற்படும் சிரமம் தோசை கல்லோடு ஒட்டிக்கொண்டு வர மறுப்பது தான். கல்லோடு ஒட்டாமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும் மிக அருமையாக தோசையை எடுக்க முடியும்.
1.முதலில் தோசை ஊற்றுவதற்கு 20 நிமிடங்கள் முன்பாகவே தோசை மாவை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வைத்து விட வேண்டும். தோசை ஊற்றும் நேரத்தில் குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து நேரடியாக ஊற்றினால் தோசை கல்லோடு ஒட்டிக் கொள்ளும்.
2. தோசை கல் சூடான பிறகுதான் தோசையை ஊற்ற வேண்டும் கல் காயாமல் தோசை ஊற்றினால் அப்பொழுது தோசை கல்லோடு ஒட்டிக் கொள்ளும். அதே நேரம் அதிக நேரம் காய விடவும் கூடாது தோசைக்கல் சூடானதும் உடனடியாக ஊற்றி விடலாம்.
3. ஒரு உருளைக்கிழங்கு அல்லது வெங்காயத்தை பாதியாக நறுக்கி எண்ணெயில் தொட்டு தடவி பிறகு தோசையை ஊற்ற வேண்டும். எண்ணெய் அதிகம் ஊற்றி தேய்க்க கூடாது. ஒரு சொட்டு மட்டும் தடவ வேண்டும். ஒரு சொட்டு எண்ணெயை தடவி தோசை ஊற்றிய பிறகு தோசையை சுற்றிலும் எண்ணெய் விட்டுக் கொள்ளலாம்.
4. தோசைக்கல்லை அடிக்கடி ஸ்கிரப் வைத்து கரண்டி கொண்டு தேய்க்காமல் மெதுவாக கைகளில் தேய்த்தால் போதுமானது. தோசை கல்லை தேய்த்து காய்ந்ததும் ஒரு துளி எண்ணெயை தடவி வைத்து விடவும்.
5. தோசை சரியாக எடுக்க வராமல் இருக்கும் நேரத்தில் இரண்டு முட்டையை ஊற்றி ஆம்லெட் போட்ட பிறகு தோசை ஊற்ற ஆரம்பித்தால் தோசை கல்லில் ஒட்டாமல் அருமையாக எடுக்க வரும்.
6. எப்பொழுதும் தோசை ஊற்றும் பொழுது தோசை கல்லை அதிகமான தீயில் வைக்காமல் மிதமான தீயில் வைத்து தோசையை சுட்டு எடுக்க வேண்டும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றி தோசை சுட்டுப் பாருங்கள் நிச்சயம் கல்லில் ஒட்டாமல் தோசை வரும்.