சுலபமா செய்யலாம் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸுக்கு சூப்பரான கொத்தமல்லி சாதம்!

கொத்தமல்லி சாதம் நறுமணமும் சுவையும் நிறைந்த ஒரு எளிமையான சாதம் ரெசிபி. இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக கொடுக்கும் பொழுது இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதனுடன் உருளைக்கிழங்கு வறுவல் வைத்துக் கொடுத்தால் போதும் வீடு திரும்பும் பொழுது உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் வரும் அந்த அளவிற்கு இந்த கொத்தமல்லி சாதம் அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான கொத்தமல்லி சாதத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

குழந்தைகளுக்கு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி… காய்கறிகள் சேர்த்த வெஜிடபிள் புலாவ்!

கொத்தமல்லி சாதம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசியை குழைந்து விடாமல் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசி இல்லாமல் இதனை நீங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் சாப்பாட்டு அரிசியிலும் செய்யலாம். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு கட்டு கொத்தமல்லி தழைகளை நன்கு சுத்தம் செய்து தண்டு மற்றும் வேர் பகுதிகளை நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் நான்கு பச்சை மிளகாய் மற்றும் ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கால் ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு துண்டு பட்டை, ஒரு பிரியாணி இலை இரண்டு கிராம்பு, இரண்டு வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும் இவற்றோடு 10 முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஏற்கனவே மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதையும் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும். இப்பொழுது வடித்து வைத்த சாதத்தை இதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும் சாதம் முழுவதும் ஒரே மாதிரி மசாலாக்கள் படுமாறு கிளறி விடவும். இறுதியாக இதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறலாம். இதில் முந்திரிப் பருப்பிற்கு பதில் வேர்க்கடலை சேர்த்தும் செய்யலாம்.

இப்படி ஒரு ரசத்தை நீங்க வீட்ல செய்திருக்கவே மாட்டீங்க… அட்டகாசமான சுவையில் கல்யாண ரசம்!

அவ்வளவுதான் சுவையான மனம் நிறைந்த கொத்தமல்லி சாதம் தயார்…!