தென்னிந்திய வகைகளில் தினந்தோறும் ஒரு குழம்பு வகை இடம் பிடித்து விடும். சைவ அசைவ குழம்புகளில் ஏதேனும் ஒன்று கட்டாயம் மதிய உணவில் இருக்கும். காரக்குழம்பு, புளிக்குழம்பு, கெட்டி குழம்பு, சாம்பார், பருப்பு உருண்டை குழம்பு, கருவாட்டு குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு என இந்த குழம்பு வகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த குழம்புகளை செய்யும்பொழுது சில டிப்ஸ்களை பாலோ செய்தால் குழம்பின் சுவை அட்டகாசமாக இருக்கும். குழம்பு வைக்கும் வேலையும் எளிதாக தெரியும். வாருங்கள் குழம்பு வைக்கும் பொழுது ஃபாலோ செய்ய வேண்டிய சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
அடுத்த முறை சாம்பார் வைக்கும் பொழுது இந்த டிப்ஸ்களை பாலோ செய்ய மறந்துடாதீங்க…!
தட்டைப் பயறு, மொச்சைக்கொட்டை போன்ற பல பயறு வகைகளை வைத்து நாம் குழம்பு வைப்பது உண்டு. இவ்வாறு செய்யும் குழம்பு வகைகள் உடலுக்கு நன்மையை தரும். சுவை நிறைந்ததாகவும் இருக்கும். ஆனால் இந்த குழம்பு வகைகள் பெரியவர்களுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே வாயுத்தொல்லை ஏற்படாமல் இருக்க பயறு வகைகளை வேக வைக்கும் பொழுது சிறிதளவு கட்டிப் பெருங்காயத்தை சேர்த்து வேகவைத்தால் வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
குழம்பு வகைகளில் பலவகையான குழம்புகளுக்கு நாம் புளி கரைத்து ஊற்றுவது உண்டு. புளியை ஊறவைத்து கரைத்து ஊற்றும் பொழுது கைகளால் வடிகட்டி ஊற்றுவோம். காரணம் புளிக்கரைசலில் ஏதேனும் மண் தூசி போன்றவை இருந்தால் அது கைகளிலேயே தேங்கு விடும் என்பதற்காக. ஆனால் இதற்காக சமையல் அறையில் எப்பொழுதும் தனியாக ஒரு வடிகட்டி வைத்துக் கொள்ளலாம். புளிக்கரைசலை அந்த வடிகட்டி வழியாக ஊற்றினால் வேலையும் எளிதாகும் மேலும் கைகளில் வடிகட்டுவதை விட இதில் வடிகட்டினால் தூசி குழம்பில் சேர்வதை அறவே தடுக்கலாம்.
கருவாட்டுக் குழம்பு வைக்கும் பொழுது எப்பொழுதும் கருவாட்டை சிறிது நேரம்ண வெண்ணீரில் ஊறவைத்து அதன் பிறகு செய்யலாம். அதேபோல் ஒரு வானொலியில் எண்ணெயை சூடு செய்து அதில் கருவாட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்கி அதன் பிறகு குழம்பு வைத்தால் அந்த கருவாட்டு குழம்பின் சுவை தனியாக இருக்கும். இதற்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினால் கூடுதல் சிறப்பு. எந்த கருவாடாக இருந்தாலும் அதனை சிறிது நேரம் பொன்னிறமாகும் வரை எண்ணையில் வதக்கி செய்தால் குழம்பின் சுவை கூடும்.
குழம்பிற்கு புளி ஊற வைக்க மறந்துவிட்டால் ஒரு தேவையான அளவு புளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அதனை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டில் அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து புளிக்கரைசலை தயார் செய்து கொள்ளலாம். அல்லது சூடான தண்ணீரில் புளியை ஊற வைத்தால் புளி சீக்கிரம் ஊறிவிடும்.