சமையல் எரிவாயு இனி இப்படி பயன்படுத்துங்கள்… உங்கள் சமையல் எரிவாயு நீண்ட நாள் வர அருமையான டிப்ஸ்!

மின்சாரம் மூலம் பயன்படுத்தக்கூடிய பலவகையான அடுப்புக்கள், சமைக்கும் சாதனங்கள் வந்தாலும் பலரது வீட்டில் இன்றும் பயன்படுத்துவது கேஸ் ஸ்டவ் தான். கேஸ் ஸ்டவ்வில் உபயோகப்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலருக்கு சீக்கிரம் தீர்ந்து விடுவதை போல் தோன்றும். சமையல் எரிவாயு சட்டென்று முடியாமல் நீண்ட நாள் வருவதற்கு சில டிப்ஸ்களை பாலோ செய்தால் போதும். இது மிக கடினமான அறிவியல் ஆராய்ச்சி போன்று அல்ல. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளில் சற்று இதில் கூடுதல் கவனம் செலுத்தினாலே போதும் சமையல் எரிவாயுவை நாம் அதிகம் மிச்ச படுத்தலாம்.

சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்த செய்ய வேண்டியவை:

அரிசி, தானியங்கள், பருப்பு வகைகள், பயறு வகைகள் போன்றவற்றை வேக வைக்க கூடுமானவரை குக்கரையே பயன்படுத்தினால் சிறந்தது. குக்கரை பயன்படுத்துவதால் 20 முதல் 46 சதவீதம் வரை சமையல் எரிவாயு மிச்சப்படும்.

பெரிய அடுப்பில் சமைப்பதை விட கேஸ் ஸ்டவ்வில் சிறிதாக இருக்கும் அடுப்பில் சமைப்பதால் 10% வரை நாம் சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்தலாம்.

பொருட்களை வேக வைக்கும் பொழுது தண்ணீர் கொதிநிலையை அடைந்தவுடன் மிதமான தீயில் வைத்து விடவும். அதற்குப் பிறகும் அதிக தீயில் வைத்தால் தேவை இல்லாமல் சமையல் எரிவாயு வீணாகும்.

வேக வைக்க வேண்டிய பொருட்களை முன்கூட்டியே ஊறவைத்து அதன் பிறகு வேக வைத்தல் நல்லது. இதனால் உணவு பொருள் சீக்கிரம் வெந்து விடுவதோடு சமையல் எரிவாயுவை 22 சதவீதம் வரை மிச்சப்படுத்த முடியும்.

பாத்திரத்தில் சமைக்கும் பொழுது எப்பொழுதும் அகன்ற பாத்திரத்தை சமையலுக்கு பயன்படுத்தவும். அதே சமயம் மூடி போட்டு சமைத்தால் சமையல் சீக்கிரம் முடிந்துவிடும் எரிவாயுவும் மிச்சப்படும்.

கேஸ் ஸ்டவ்வின் பர்னரை அவ்வப்போது சுத்தப்படுத்துங்கள். பர்னரில் ஏற்படக்கூடிய அடைப்புக்கள் அதிக அளவிலான கேஸை வீணாக்கும்.அடுப்பை முறையாக பராமரித்தால் நாம் எரிவாயுவை மிச்சப்படுத்தலாம்.

சமைக்கும் பொழுது சமையலுக்கு தேவையான பொருட்களை அருகில் வைத்துக்கொண்டே சமைக்க தொடங்குங்கள். அடுப்பில் பாத்திரத்தை வைத்து விட்டு அதன் பிறகு எதையும் தேட வேண்டாம். அனைத்தையும் தயாராக வைத்துவிட்டு சமைத்தால் சமையலும் எளிதாகும் எரிவாயுவும் மிச்சப்படும்.