என்னதான் சமையலில் பல வருட அனுபவம் இருந்தாலும் சமையலை நன்றாக கற்று தேர்ந்தாலும் அவசரமாக சமைக்கும் பொழுது பல நேரங்களில் நாம் சிறு சிறு தவறுகளை செய்வது உண்டு. மேலும் புதிதாக சமையல் கற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கும் சமையல் மிகப்பெரிய வேலையாக தோன்றும். இவ்வாறெல்லாம் இல்லாமல் இருக்க நாம் சமையலில் சில சிறிய டிப்ஸ்களை தெரிந்து கொண்டால் போதும். இந்த டிப்ஸ்கள் நம்முடைய சமையலை எளிதாக்குவது மட்டுமில்லாமல் சமையலில் ராணியாகவும் திகழ செய்யும். வாருங்கள் சமையலை எளிதாக்கும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
காலையில் பெரும்பாலான வீடுகளில் பரபரப்பான சமையல் அறை தான் காட்சியளிக்கும். காரணம் வீட்டில் எல்லோருக்கும் காலை உணவு வேலைக்குச் செல்பவர்கள் மதிய உணவும் சேர்த்து என அன்றய நாளில் முக்கால்வாசி சமையலை காலை நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே அந்த பரபரப்பான நேரத்தில் சில பிழைகளை சமையலில் நாம் செய்து விடுவோம். அவ்வாறு செய்யாமல் இருக்க காலை உணவில் சில முக்கிய குறிப்புகளை ஒரு பேப்பரில் எழுதி கண்ணில் படும்படி ஒட்டி விடுதல் நல்லது குறிப்பாக உப்மா செய்வதென்றால் எவ்வளவு தண்ணீர், சப்பாத்திக்கு எத்தனை கப் மாவு போன்ற சில அடிப்படை விஷயங்களை எழுதி ஒட்டிவிட்டால் நல்லது.
காலை நேரத்தில் உருளைக்கிழங்கை வேகவைத்து அதன் தோலை உரிப்பது என்பது மிகப்பெரிய வேலையாக தெரியும். உருளைக்கிழங்கின் தோலை உரித்து விட்டாலே பாதிவேலை முடிந்தது போல் தோன்றும். எனவே எப்போதும் உருளைக்கிழங்கை வேக வைக்கும் பொழுது கத்தியைக் கொண்டு உருளைக்கிழங்கில் நடுவில் சுற்றி வட்டமாக கீரி அதன் பிறகு வேக வையுங்கள். உருளைக்கிழங்கு வெந்த பிறகு அதனை வேறொரு பாத்திரத்தில் உள்ள குளிர்ந்த நீருக்கு மாற்றி இரு பக்கமும் கைகளால் பிடித்து இழுத்தால் போதும் தோல் கையோடு கழன்று வந்துவிடும்.
காலையில் சட்னி செய்யும் பொழுது குறைந்த அளவில்தான் தக்காளி மற்றும் வெங்காயம் இருக்கிறது. வீட்டில் உள்ள அனைவருக்கும் இதை வைத்து சட்னி செய்தால் போதுமானதாக இருக்காது என்று நீங்கள் நினைத்தால் கவலை வேண்டாம் வழக்கமாக வைப்பது போல் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கிய பிறகு சிறிதளவு வறுத்த வேர்க்கடலையை அதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இது சட்னிக்கு நல்ல கெட்டித்தன்மையை கொடுக்கும். எனவே நீங்கள் கூடுதலாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதே சமயம் சட்னியின் சுவையும் அற்புதமாக இருக்கும்.
தோசை செய்யும் பொழுது எப்பொழுதும் நல்ல பொன்னிறமாக வரவில்லை என்று நீங்கள் நினைத்தால் அடுத்த முறை தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது அதனுடன் சிறிதளவு கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்துப் பாருங்கள். தோசை உணவகங்களில் கிடைப்பது போல நல்ல பொன்னிறமாக வரும். இந்த மாவை இட்லிக்கு பயன்படுத்த முடியாது என்று நினைத்தால் தோசைக்கு ஊற்றும் பொழுது சிறிதளவு கடலை மாவை சேர்த்து தோசை ஊற்றி பாருங்கள் வெள்ளையாக இல்லாமல் பொன் நிறமாக வரும்.