வீட்டில் உள்ள அனைவரின் பசியை போக்கி அவர்கள் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்பவர்கள் அந்த வீட்டில் சமையல் அறையை நிர்வகிப்பவர்கள் தான். இப்படி உங்கள் வீட்டின் சமையல் அறையை நிர்வகிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கு பயன்படக்கூடிய சிறப்பான சில டிப்ஸ்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
1. காபி பொடியை என்னதான் காற்று புகாத பாட்டிலில் கொட்டி வைத்திருந்தாலும் சில நேரங்களில் கட்டி பட்டுவிடும். இதை தவிர்க்க காபி பொடியில் ஒரு டிஷ்யூ பேப்பர் துண்டை போட்டு வைத்தால் போதும் காபி பொடி கட்டி படாமல் அப்படியே இருக்கும்.
2. எந்தவிதமான பருப்பு வகையாக இருந்தாலும் அதை வெறும் வாணலியில் லேசாக வறுத்து அதற்கான கொள்கலனில் கொட்டி வைத்தால் அந்த பருப்பு வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்கும்.
3. கத்தரிக்காயை நறுக்கியவுடன் தண்ணீரில் போட்டு வைத்தாலும் சில நேரங்களில் கருப்பாக மாறிவிடும். இதை தவிர்க்க தண்ணீரில் சிறிதளவு பாலை சேர்த்து அதன் பிறகு கத்தரிக்காயை நறுக்கி போட்டால் கத்தரிக்காய் கறுக்காமல் இருக்கும்.
4. எலுமிச்சை பழம் காய்ந்து போகாமல் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்க எலுமிச்சை பழத்தின் மேற்பரப்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தடவி விட்டால் போதும். எலுமிச்சை பழம் அப்படியே இருக்கும்.
5. சப்பாத்தி தேய்க்கும் பொழுது எப்பொழுதும் கோதுமை மாவை தூவி தேய்ப்போம். இதற்கு பதிலாக காலியான ஒரு நெய் டப்பாவின் மூடியில் ஊசியை சூடு செய்து துளைகள் இட்டு அதனுள் கோதுமை மாவை போட்டு தூவ பயன்படுத்திக் கொள்ளலாம்.
6. சாம்பார் கொதிக்கும் பொழுது அதிகமாக பொங்கி வருகிறது என்றால் அதன் மேல் சில துளி எண்ணெய் ஊற்றினால் போதும் சாம்பார் பொங்கி வராது.
வாவ்…! சமையல் அறையில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சூப்பரான டிப்ஸ்கள்!
7. மசாலாக்கள் எதையாவது பாக்கெட்டோடு பிரித்து பயன்படுத்தி அப்படியே மடித்து வைத்தால் அதனுள் உள்ள பொருள் சிந்தி வீணாகிவிடும். இதைத் தவிர்க்க மசாலா பொருட்கள் பிரித்து பயன்படுத்திய பிறகு ஒரு கத்தியை அடுப்பில் காட்டி இருபது வினாடிகள் சூடு செய்து பிரித்த பகுதியில் ஒரு கோடு போல போட்டால் போதும். அந்தப் பகுதி அப்படியே ஒட்டிக் கொள்ளும் இதனால் பொருட்கள் கீழே சிந்தாது அதன் வாசனையும் போய்விடாது.