நம் வீடுகளில் இறால் எடுக்கும் பொழுது எப்பொழுதும் ஒரே மாதிரியாக தொக்கு, பிரியாணி, குழம்பு என செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் சமைத்துக் கொடுத்தால் அனைவரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் கேரளா ஸ்பெஷல் தேங்காய் பால் சேர்த்து சமைக்கும் பொழுது அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். அந்த வகையில் கேரளா ஸ்பெஷல் தேங்காய் பால் இறால் கறி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
தேங்காய்ப்பால் இறால் கறி செய்வதற்கு முதலில் மசாலாக்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக இரண்டு முதல் மூன்று பெரிய வெங்காயம் நான்கு ஐந்தாக நறுக்கியது, ஒரு சிறிய துண்டு இஞ்சி, நன்கு பழுத்த இரண்டு அல்லது மூன்று தக்காளி பழம் நான்காக நறுக்கியது, கைப்பிடி அளவு கருவேப்பிலை, 10 பல் வெள்ளை பூண்டு, பாதி எலுமிச்சை பழச்சாறு, ஒரு தேக்கரண்டி மிளகு, காரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது நான்கு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மையாக அரைக்க வேண்டும்.
இவை அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்த்து அரைக்காமல் தேங்காய் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மசாலா தயாராக உள்ளது. அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
இந்த கிரேவி செய்வதற்கு வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கினால் போதுமானது. பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை. தற்பொழுது வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது மசாலாவை கெட்டி பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் இதனுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்கிக் கொள்ளலாம்.
இறுதியாக நம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மீண்டும் இப்பொழுது அரை கப் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் இந்த கலவையை கொதிக்க விட வேண்டும்.
இந்த கலவையை மிதமான தீயில் ஐந்து முதல் பத்து நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்தால் இப்பொழுது இறால் தேங்காய்ப்பால் கிரேவி தயார். இறுதியாக கோடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.
அதிகப்படியான மசாலாக்கள் சேர்க்காமல் மிதமான காரத்துடன் இருப்பதால் இந்த இறால் தேங்காய் பால் கிரேவியை ஆப்பம் மற்றும் இடியாப்பத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.