சின்ன வெங்காயம் ஒன்று போதும்… இரண்டு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத அருமையான தொக்கு ரெசிபி!

இந்த அவசர காலத்தில் தினமும் காலையில் விதவிதமான உணவு வகைகள் சமைக்க பலருக்கு நேரம் இருப்பதில்லை. ஆனால் சுவையாக சாப்பிட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அந்த ஆசையை திருப்திப்படுத்தும் வகையில் சின்ன வெங்காயம் வைத்து அருமையான தொக்கு ரெசிபியை இந்த விளக்கத்தில் பார்க்கலாம். சின்ன வெங்காயம் உணவில் அதிகமாக சேர்க்கும் பொழுது உடலுக்கு குளிர்ச்சி கொடுத்து ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இந்தத் தொக்கு சூடான சாதம் இட்லி, தோசை என அனைத்திற்கும் சிறப்பான கச்சிதமாக இருக்கும். வாங்க சின்ன வெங்காயம் தொக்கு செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்…

ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இரண்டு கப் அளவு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் பயன்படுத்தி தொக்கு தயார் செய்யும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரையில் நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து வதக்க வேண்டும்.

மிதமான தீயில் வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி தனிக்குழம்பு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இதை அடுத்து கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வெங்காய தொக்கை கொதிக்க விட வேண்டும்.

நம் வீடு பார்ப்பதற்கு எப்போதும் புதிது போலவே தோன்ற வேண்டுமா? அருமையான வீட்டு குறிப்புகள்!

மிதமான தீயில் இந்த தொக்கு ஐந்து முதல் பத்து நிமிடம் நன்கு கொதிக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து இறக்கினால் சுவையான வெங்காய தொக்கு தயார். இந்த தொக்கு நன்கு சூடு ஆறியதும் காற்று புகாத கண்ணாடி பாத்திரத்திற்கு மாற்றி வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெட்டுப்போகாது.

சூடான சாதம், தோசை, இட்லி என அனைத்திற்கும் இந்த தொக்கு மிக அருமையாக பொருந்தும்.