உடலுக்கு குளிர்ச்சி மற்றும் இரும்பு சத்து நிறைந்த தேங்காய்ப்பால் வைத்து அருமையான வெஜிடபிள் பிரிஞ்சி ரைஸ்!

தேங்காய் பாலில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. சத்து குறைபாடு உள்ளவர்கள் வாரத்தில் மூன்று முறையாவது தேங்காய் பாலை நம் உடலுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த தேங்காய்ப்பால் உடலுக்கு குளிர்ச்சி தந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. தேங்காய்ப்பால் வைத்து அருமையான வெஜிடபிள் பிரிஞ்சி ரைட் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை ஒன்று, பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, ஸ்டார் பூ ஒன்று சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இதனுடன் நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்ததாக வெஜிடபிள் ரைஸ் செய்வதற்கு தேவையான காய்கறிகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

உதாரணமாக நீளவாக்கில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி, பட்டர் பீன்ஸ் சேர்த்து வதக்கி கொள்ளலாம். காய்கறிகள் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாயை நேராக கீரி சேர்த்துக் கொள்ளலாம்.

பச்சை மிளகாய் அதிகமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை லேசாக கடாயில் பிரட்டினால் போதுமானது. இப்பொழுது ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து காய்கறிகளுடன் நன்கு வதக்க வேண்டும். அடுத்ததாக அரை தேக்கரண்டி உப்பு, கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் ஆக மாற்ற வேண்டுமா? வாங்க காரசாரமான கிராமத்து ஸ்டைல் மிளகு கோழி பிரட்டல்!

இந்த பிரிஞ்சி ரைஸ் செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சீரக சம்பா அரிசியை கழுவி சுத்தம் செய்து ஊற வைத்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் சீரக சம்பா அரிசிக்கு இரண்டு கப் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். இறுதியாக உப்பு சரிபார்த்து குக்கரை மூடிவிடலாம்.

மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று விசில்கள் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் வெஜிடபிள் பிரிஞ்சி தயார். இந்த சாதம் பரிமாறுவதற்கு முன்பாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி மாறினால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.