நாம் மோர்க் குழம்பு அடிக்கடி சாப்பிட்டிருப்போம். அந்த மோர்க் குழம்பில் பருப்பு உருண்டை சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிதுதான். வாங்க பருப்பு உருண்டை மோர் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இரண்டு கப் துவரம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஊறிய துவரம் பருப்புடன் இரண்டு பச்சைமிளகாய், இரண்டு காய்ந்த மிளகாய், இரண்டு மேசைக்கரண்டி தேங்காய் துருவல், அரை தேக்கரண்டி மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய சிறிதளவு கொத்தமல்லியை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
மிக்சியில் இரண்டு கப் தேங்காய் துருவல், ஐந்து பச்சைமிளகாய், இரண்டு மேசைக்கரண்டி சீரகம், ஒரு மேசைக்கரண்டி ஊற வைத்த பச்சரிசி, ஒரு மேசைக்கரண்டி துவரம் பருப்பு ஆகியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து, மூன்று கப் தயிரை நன்கு கடைந்து அதில் ஊற்றவும். அத்துடன் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து சிறு தீயில் கொதிக்கவிடவும். பொங்கி வரும் போது அதில் உருண்டைகளை போடவும். ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விடவும். சுவையான பருப்பு உருண்டை மோர் குழம்பு தயார்.