பாசிப்பருப்பு பாயாசம் என்பது தென்னிந்தியாவில் பாரம்பரியமான ஒரு உணவு வகையாகும். பாயாசம் பல வகையாக செய்யலாம். விரதங்கள், பூஜை, பண்டிகை நாட்கள், வீட்டு விசேஷங்கள் இவை அனைத்தும் பாயாசம் இல்லாமல் முழுமை அடையாது. அனைத்து விழாக்களிலும், பாயாசம் மிக முக்கிய உணவாக கருதப்படும்.
அதிலும் பாசிப்பருப்பு பாயாசம் செய்வதற்கு மிகவும் எளிமையானது மற்றும் சுவையானதும் கூட. பூஜை வேலைகளில் இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்திட எளிமையாக சட்டென்று இந்த பாயாசத்தை செய்துவிடலாம். மேலும் இந்த பாசிப்பருப்பு புரதச்சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கு ஏதேனும் இனிப்பு ஆரோக்கியமாக செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் இதனை முயற்சித்து பார்க்கலாம்.
பாசிப்பருப்பு பாயாசம் செய்யும் முறை:
பாசிப்பருப்பு அரை ஆழாக்கு எடுத்து எண்ணெய் எதுவும் சேர்க்காமல் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பின்பு இதனை தண்ணீர் சேர்த்து வேக விடவும். குக்கரில் ஒன்றுக்கு ஐந்து என்ற கணக்கில் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். மூன்று விசில் வரை விடவும்.
நான்கு வெல்ல கட்டிகளை தட்டி தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி ஒரு கடாயில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பாகு எடுத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு வெந்து கரைந்ததும் அதனுடன் இந்த வெல்லப்பாகினை சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு மூடி தேங்காயினை துருவி இந்த பாசிப்பருப்பு மற்றும் வெல்லத்துடன் சேர்த்துக் கொள்ளவும். (தேங்காயை துருவி சேர்க்க விரும்பாதவர்கள் இறுதியாக தேங்காய் பால் எடுத்தும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம் அதுவும் வேறு விதமான சுவையாக நன்றாக இருக்கும்)
ஒரு டம்ளர் காய்ச்சிய பாலினை இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். அனைத்தும் சேர்ந்து கெட்டியாக வரும் வரை கொதிக்க விட்டு பின் இறக்கி விடவும்.
இப்பொழுது முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, பாதாம் போன்ற நட்ஸ்களை தனியாக 2 ஸ்பூன் நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும் இதனை பாயாசத்துடன் சேர்த்து ஏலக்காய் பொடியினை தூவி கலக்கி விடவும்.
அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார்!