கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தேங்காய் பால் சேர்த்து முட்டை கிரேவி! ரெசிபி இதோ…

வெயிலின் தாக்கம் தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது. உடலை குளிர்ச்சியாக வைப்பது மட்டுமின்றி ஊட்டச்சத்தாக வைப்பதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த முறை தேங்காய் பால் நாம் சாதம் மற்றும் பானமாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கிடைப்பது மட்டுமின்றி ஊட்டச்சத்தும் குறைபாடு இன்றி கிடைக்க உதவியாக இருக்கும். இந்த முறை தேங்காய்ப்பால் வைத்து அருமையான முட்டை கிரேவி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் எளிமையாக பார்க்கலாம்…

முதலில் ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளலாம். இதில் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், பொடியாக நறுக்கிய 10 வெள்ளை பூண்டு, பொடியாக நறுக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி, 2 பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலாவை கொதிக்க விட வேண்டும். மசாலா நன்கு கொதித்து கெட்டி பதத்திற்கு வரும் நேரத்தில் தேவைக்கேற்ப நான்கு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். முட்டைகளின் மேல் பக்கம் மிளகு சீரகத்தூள் அரை தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த குழம்பை மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவல் தேவையான அளவு தண்ணீர் கலந்து அரைத்து கெட்டியான பால் எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் அரைத்து கெட்டியாக ஒரு முறை பால் எடுத்தால் போதுமானது.

சிக்கன் வைத்து காரம் குறைவான வெள்ளை சால்னா! சுவையான ரெசிபி இதோ…

மசாலாவுடன் இணைந்து முட்டையின் நன்கு வெந்து வரும் நேரத்தில் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்து கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியாக அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் முட்டை கிரேவி தயார்.