கொழுக்கொட்டை போல இருந்தாலும் சாப்பிட பப்ஸ் போல இருக்கும் டீக்கடை ஸ்நாக்ஸ்!

டீக்கடைகளின் டீ மற்றும் காபி குடிக்கும் நேரங்களில் பலவிதமான ஸ்னாக்ஸ் கண்ணில் தென்படும். ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு வெவ்வேறு விதத்திலும் சுவையில் மாறுபாடாக இருக்கும். இந்த முறை பார்ப்பதற்கு வெளிப்புறம் கொழுக்கட்டை போலவும் சாப்பிடுவதற்கு முட்டை பப்ஸ் போல இருக்கும் கல்மாஸ் ரெசிபி. எளிமையான முறையில் நம் வீட்டிலேயே செய்வதற்கான விளக்கமான ரெசிபி இதோ..

முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம். இதனுடன் நான்காக நறுக்கிய ஒரு தக்காளி பழம் அரை தேக்கரண்டி சீரகம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் இவற்றை ஒரு சாப்பரில் சேர்த்து மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் கலவைகளை அதில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து இரண்டு வேக வைத்த முட்டைகளை துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டை துருவல் சேர்த்த பிறகு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது சேர்த்து கலந்து கொடுத்து உப்பு சரிபார்த்தால் பூரணம் தயாராக மாறி உள்ளது.

இப்பொழுது வெளிப்புற மாவு தயார் செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு அல்லது ஒரு கப் இடியாப்ப மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரின் அரை கப் தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய ஐந்து சின்ன வெங்காயம், அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிரியாணி உடன் போட்டி போடும் சுவையில் மசாலா அதிகமாக சேர்க்காத ஹைதராபாத் ஸ்பெஷல் மட்டன் தகாரி!

இந்த அரைத்த விழுதுகளை இடியாப்ப மாவு அல்லது அரிசி மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் மாவிற்கு தேவையான அளவு உப்பு மற்றும் கொதிக்கும் வெந்நீர் கலந்து மாவை பிசைந்து கொள்ள வேண்டும். மாவை மிக மென்மையாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது மாவு தயாராக மாறி உள்ளது இதை சிறு உருண்டைகளாக தனியே எடுத்து முதலில் சிறிய வட்ட வடிவில் திரட்டி கொள்ள வேண்டும். இதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பூரணத்தை உள்ளே வைத்து விடலாம். அதன் பிறகு நமது விருப்பத்திற்கு ஏற்ப வடிவில் மாற்றிக் கொள்ளலாம். இப்பொழுது இந்த கொழுக்கட்டையை இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் குறைந்தது பத்து நிமிடம் மிக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் கரண்டி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து மாவு போல தயார் செய்து கொள்ள வேண்டும். நாம் வேக வைத்திருக்கும் கொழுக்கட்டைகளை இதில் நன்கு பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான கல்மாஸ் தயார்.