வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயங்களில் முட்டை மிக உதவியாக இருக்கும். மேலும் அசைவம் சாப்பிடத் தோன்றும் நேரங்களிலும் முட்டை வைத்து அதே சுவையில் பலவிதமான ரெசிபிகள் செய்து அசத்தலாம். இன்று அதற்கும் ஒரு படி மேலாக முட்டை வைத்து மூன்று மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத ஊறுகாய் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 10 முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு டிபன் பாத்திரத்தில் உள்பக்கமாக எண்ணெய் தடவி எடுத்துக் கொள்ளலாம்.
இதில் நாம் அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றிக் கொள்ளலாம். இப்பொழுது இதை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு ஐந்து நிமிடம் ஆரம்பித்து கொள்ளலாம். அதன் பிறகு இதை பன்னீர் துண்டுகள் போல சதுர வடிவில் நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி வெந்தயம், இரண்டு தேக்கரண்டி கடுகு சேர்த்து நன்கு பொரிந்து வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வருத்த பொருட்களை தனியாக மாற்றிவிட வேண்டும். மீண்டும் அதே கடாயில் ஒரு குழி கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
எண்ணெய் சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு உளுத்தம் பருப்பு, 20 பல் வெள்ளை பூண்டுவை தட்டி சேர்த்து தாளித்துக் கொள்ளலாம். அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி பெருங்காயத்தூள், 4 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயோடு வதக்க வேண்டும். மிளகாய் தூள் பச்சை வாசனை சென்றவுடன் ஊறுகாய்க்கு தேவையான அளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த வாரம் மீன் குழம்பிற்கு பதிலாக பொரித்த மீன் வைத்து அருமையான கிரேவி ரெசிபி!
இதனுடன் கெட்டியான எலுமிச்சை பழ அளவு புளி கரைசல் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். மசாலா கெட்டி பதத்திற்கு வரும் நேரத்தில் நறுக்கி வைத்திருக்கும் முட்டைகளை கடாயில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இறுதியாக கடுகு மற்றும் வெந்தயம் வறுத்து பொடி செய்து அதை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு தேக்கரண்டி அளவு இந்த பொடி சேர்த்து நன்கு கிளறி கொடுத்து இறக்கினால் சுவையான முட்டை ஊறுகாய் தயார். இந்த ஒரு ஊறுகாய் போதும் சூடான சாதத்திற்கு அருமையாக வைத்து சாப்பிட்டுவிடலாம். மேலும் 3 மாதம் ஆனாலும் இந்த ஊறுகாய் கெட்டுப் போகாததால் தாராளமாக செய்து ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.