தோசை பிரியர்களை தொடர்ந்து ஆப்பம் அனைவருக்கும் பிடித்த உணவு வகையில் ஒன்று. நல்ல மிருதுவாக பஞ்சு போல சாப்பிடுவதற்கு எளிமையாக இருக்கும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால் வைத்து சாப்பிடும் பொழுது சத்து நிறைந்ததாகவும் மாறுகிறது. எளிதில் ஜீரணம் ஆகும் இந்த ஆப்பம் மிருதுவாக வர வேண்டும் என்பதற்காக சோடா உப்பு கலந்து சமைப்பது வழக்கமான ஒன்று. . இந்த முறை சோடா உப்பு எதுவும் கலக்காமல் புசுபுசு மற்றும் மிருதுவான ராகி ஆப்பம் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் ராகி, ஒரு கப் இட்லி அரிசி சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஐந்து முதல் ஆறு மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ராகி அரிசி மாவு அரைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக கால் கப் உளுந்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஆறு மணி நேரம் கழித்து கிரைண்டரில் ராகி மற்றும் அரிசியை மீண்டும் தண்ணீர் வடிகட்டி அரைக்க விட வேண்டும். இந்த ராகி மாவு பாதியாக அறைந்து வரும் நேரத்தில் ஊற வைத்திருக்கும் உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உளுந்து சேர்த்த பிறகு மாவு நன்கு மையாக அரைபட வேண்டும்.
அதன் பிறகு மாவை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு உப்பு கலந்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளலாம். இந்த மாவை குறைந்தது 5 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். இப்பொழுது ஆப்பம் செய்வதற்கு ராகி மாவு தயாராக உள்ளது.
பசியிலும் ருசியாக சாப்பிட பஞ்சு போல இளநீர் இட்லி, மீன் குழம்பு ரெசிபி இதோ…
அடுப்பில் ஆப்பச்சட்டி வைத்து எண்ணெய் தடவி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஆப்ப மாவை சிறிதளவு தண்ணீர் கலந்து நன்கு கரைத்து கல்லில் சேர்த்து சுற்றி மூடி வைக்க வேண்டும். இரண்டு நிமிடம் நன்கு மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் ஆப்பம் தயார். இதற்கு தேங்காய் பால் வைத்து சாப்பிடும்பொழுது அமிர்தமாக இருக்கும்.
தேங்காய் சட்னி, சாம்பார், வெஜிடபிள் குருமா என தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சைடிஸ் வைத்து சாப்பிடலாம். எப்போதும் முறுமுறுவென தோசை செய்யாமல் ஒருமுறை இதுபோல முறுமுறுவென ஆப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.