பசியிலும் ருசியாக சாப்பிட பஞ்சு போல இளநீர் இட்லி, மீன் குழம்பு ரெசிபி இதோ…

பசிக்கும் பொழுது நமக்கு விருப்பமான உணவை சாப்பிடும் பொழுது கிடைக்கும் திருப்தி தனி உணர்வுதான். அதிலும் பஞ்சு போல எளிதில் ஜீரணம் ஆகும் சத்து நிறைந்த இளநீர் இட்லிக்கு காரசாரமான கெட்டியான மீன் குழம்பு வைத்து சாப்பிடும் பொழுது சுவையோ சுவை. வாங்க இந்த ரெசிபி செய்வதற்கான எளிமையான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் இட்லி தயார் செய்வதற்கு அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கப் இட்லி அரிசியை தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல அரை கப் உளுந்து தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். உளுந்துடன் கால் தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளலாம்.

ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பு குறைந்தது ஐந்து முதல் எட்டு மணி நேரம் நன்கு ஊற வேண்டும். அதன் பிறகு தனித்தனியாக அரிசி மற்றும் உளுந்து அரைத்து ஒன்றாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

எட்டு மணி நேரம் கழித்து மாவு நன்கு குளித்து இருக்கும் பொழுது இதில் ஒரு முழு இளநீர் தண்ணீரை சேர்த்து அப்படியே ஒரு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அந்த ஒரு மணி நேரத்தில் நாம் மீன் குழம்பு தயார் செய்துவிடலாம். ஒரு குழம்பு சட்டியில் ஒரு குழி கரண்டி எண்ணெய் சேர்த்து அரை தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக 15 சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம். வெங்காயம் நன்கு வதங்கியதும் பெரிய எலுமிச்சை பழம் அளவு ஊறவைத்த புளி கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும்.

இந்த எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசலில் இரண்டு தக்காளி பழங்களை மசித்து சேர்த்துக் கொள்ளலாம். இதில் கூடுதலாக இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள், ஒரு தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த புளி கரைசலை வெங்காயம் வதங்கியதும் கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது இந்த கரைசல் பச்சை வாசனை செல்லும் வரை நன்கு கொதித்து வரவேண்டும். அதன் பிறகு நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம். மீன் சேர்த்தபிறகு அதிகமாக கலந்து கொடுக்க அவசியமில்லை. மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்கு கொதித்து வரவேண்டும்.

அசாதாரணமான சமையலையும் சாதாரணமாக செய்து முடிப்பதற்கு உதவும் அருமையான சமையல் டிப்ஸ்!

இறுதியாக இரண்டு தேக்கரண்டி மிளகுத்தூள், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மீன் குழம்பு தயார். இப்பொழுது மாவு ஒரு மணி நேரம் கழித்த பிறகு இட்லி பாத்திரத்தில் இட்லி தயார் செய்வது போல மாவை சேர்த்து இட்லி வேக வைக்க வேண்டும்.
இப்பொழுது பத்து நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான இட்லியும் தயார். இந்த இளநீர் இட்லிக்கு காரசாரமாக வைத்த மீன் குழம்பு உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை சிறப்பாக இருக்கும்.