கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஸ்பெஷல் தக்காளி கோஜி! காரசாரமான அசத்தல் ரெசிபி இதோ…

தக்காளி வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்தாலும் அதன் சுவை மற்றும் நிறத்தின் காரணமாகவே மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் விதத்திலேயே அமைந்திருக்கும். இந்த முறை அனைவருக்கும் பிடிக்க தக்காளி வைத்து எப்போதும் போல ஒரே ரெசிபி செய்யாமல் சற்று வித்தியாசமாக பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் மக்களிடையே மிகவும் பிரபலமான தக்காளி கோஜி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் இந்த ரெசிபி செய்வதற்காக தேவையான இஞ்சி பூண்டு விழுதுகளை புதிதாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தக்காளிகளை நான்கு துண்டுகளாக நறுக்கினால் போதுமானது. அதன் பிறகு ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய 20 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் ஒரு பச்சை மிளகாய், காரத்திற்கு ஏற்ப மூன்று காய்ந்த வத்தல், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக நாம் தட்டி வைத்திருக்கும் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் தாராளமாக ஆறு தக்காளி பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக தக்காளி பழங்களை நான்காக நறுக்கினால் போதுமானது. தக்காளி சேர்த்த பிறகு மசாலாகளை சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி சாம்பார் தூள், அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது தாராளமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். குறைந்தது 5 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு வெறும் பால் கொடுக்க ஒரு முறை புரோட்டின் சத்து நிறைந்த மும்பை ஸ்பெஷல் மக்கனா பால்! ட்ரை பண்ணுங்க…

இதை மூடி போட்டு பத்து நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடம் கழித்து பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை சிறிதளவு ஒரு சிறிய பாத்திரத்தில் தனியாக மாற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மீதம் இருக்கும் மசாலாவை நன்கு கடைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தக்காளி மசாலாவை நன்கு கடைந்த பிறகு நாம் முதலில் தனியாக எடுத்து வைத்த மசாலா தண்ணீர், கைபிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான தக்காளி கோஜி தயார். இந்த தக்காளி ரோஸிக்கு முறுமுறுவென தோசை, சூடான பஞ்சு இட்லி செய்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.