மேலே முறுமுறுப்பாக உள்ளே பஞ்சு போல மிருதுவாக இருக்கும் முருங்கைக்கீரை அடை! ரெசிபி இதோ…

பொதுவாக வீடுகளில் இட்லி தோசை மாவு இல்லாத சமயங்களில் புதுவிதமான ரெசிபிகள் செய்வது வழக்கமான ஒன்று. மேலும் விசேஷ நாட்களில் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக பாரம்பரிய உணவு முறைகளை சமைத்து குடும்பத்துடன் ஒன்றாக மகிழ்ந்து உண்பதும் சில வீடுகளில் இயல்பான ஒன்றாக இருக்கும். இந்த முறை எப்போதும் சாப்பிடும் இட்லி மற்றும் தோசையை எடுத்துக் கொள்ளாமல் சற்று நிறைந்த முருங்கை கீரை வைத்து பாரம்பரியமான அடை செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

முதலில் அடை செய்வதற்கு மாவு தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு கப் இட்லி அரிசியை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். அடுத்து மற்றொரு பாத்திரத்தில் அரை கப் கடலை பருப்பு, அரை கப் துவரம் பருப்பு, அரை கப் பாசிப்பருப்பு, அரை கப் உளுத்தம் பருப்பு இவற்றை தனியாக ஒரு பாத்திரத்தில் தாராளமாக தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

இந்த அரிசி மற்றும் பருப்பு குறைந்தது மூன்று மணி நேரம் ஆவது தண்ணீரில் ஊற வேண்டும். இந்த நேரத்தில் தேவையான அளவு முருங்கைக் கீரையை நன்கு சுத்தம் செய்து இலைகளை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு சாய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் அரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். சாய்ந்த வத்தல் மற்றும் அரிசி சேர்த்து ரவை பக்குவத்தில் அரைத்து எடுத்துக் கொண்டால் போதுமானது. இதை இரண்டையும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்துவிடலாம். மீண்டும் அதே மிக்ஸி ஜாரில் நம் ஊற வைத்திருக்கும் பருப்பு கலவையை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் மசாலா சேர்த்து குழம்பிற்கு பதிலாக அருமையான தக்காளி சாத ரெசிபி!

இப்பொழுது நாம் அரைத்த அரிசி மாவு மற்றும் பருப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், ஒரு கப் முருங்கை கீரை, அரை தேக்கரண்டி பெருங்காயம், அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடு படுத்தி கொள்ள வேண்டும். நாம் கலந்து வைத்திருக்கும் மாவை மெத்து மெத்து என ஊற்றிக் கொள்ளலாம். தாராளமாக நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இப்படி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான பாரம்பரியமிக்க முருங்கை கீரை அடை தோசை தயார்.