முட்டை இருக்கும் பொழுது என்ன சமைப்பது என்ற குழப்பம் போதும் தோன்றாது. முட்டை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் அசைவத்திற்கு இணையாக சிறப்பாகவே இருக்கும். முட்டை வைத்து எப்பொழுதும் ஆம்லெட் செய்வது வழக்கம்தான். இந்த முறை அந்த ஆம்லெட் வைத்து மிளகு குழம்பு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு சிறிய துண்டு பட்டை, 3 கிராம்பு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 வெள்ளை பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பெரியதாக நறுக்கிய ஒரு வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம், இரண்டு கொத்து கருவேப்பிலை, கைப்பிடி அளவு மல்லி இலை, அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி குழம்பு மசாலா தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம். தேங்காவின் நிறம் மாறி பொன்னிறமாக வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது நாம் வறுத்த அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அதே கடாயில் மீண்டும் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 10 சின்ன வெங்காயம், நான்கு காய்ந்த வத்தல் சேர்த்து வதக்கி கொள்ளலாம்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை செல்லும்வரை மிதமான தீயில் வதக்கி கொள்ளலாம்.
இந்த நேரத்தில் மற்றொரு கடாயில் முட்டையை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். இதில் மிளகு சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஆம்லெட் பதத்திற்கு பிரட்டி போட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி நமக்கு தேவையான முட்டைகளை தயார் செய்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வாசனைக்காக கைப்பிடி அளவு சேர்க்கும் கொத்தமல்லி கீரை வைத்து அருமையான கீரை கடையல்!
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடம் நன்கு கொதித்து வரும் நேரத்தில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் முட்டைகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
முட்டை சேர்த்த பிறகு ஒரு நிமிடம் மிதமான தீயில் அடுப்பை வைத்து அதன் பிறகு அணைத்து விடலாம்.இப்பொழுது சூடான மற்றும் சுவையான ஆம்லெட் மிளகு குழம்பு தயார். இந்த குழம்பு சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது அவ்வளவு சிறப்பாக இருக்கும். மேலும் இரவு நேரங்களில் இட்லி தோசைக்கு கூட வைத்து சாப்பிடலாம்.