புது மாப்பிள்ளை விருந்தில் மாலை நேர ஸ்நாக்ஸில் கட்டாயம் பரிமாறப்படும் இடியாப்பம் கொத்து பிரியாணி!

குடும்பத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து முடிந்தால் அடுத்தடுத்து திருமண ஜோடிகளுக்கு விருந்து வைப்பது வழக்கம். அப்படி விருந்திற்கு அழைக்கப்படும் ஜோடிகளுக்கு மூன்று வேலையும் புதிது புதிதாக சமைத்துக் கொடுத்து திருப்திப்படுத்துவார்கள். அதிலும் மதிய வேலைக்கு தடபுடலான அசைவ விருந்து கண்டிப்பாக வாழ இலையுடன் இருக்கும். மாலை நேரங்களில் டீ ,காபி குடிக்கும் பொழுது புது மாப்பிள்ளைக்கு ஸ்னாக்ஸ் சாதாரணமாக இல்லாமல் சற்று சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இடியாப்பம் வைத்து கொத்து பிரியாணி செய்து வழங்குவது வழக்கம். எளிமையான முறையில் இடியாப்ப கொத்து பிரியாணி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பட்டை சிறிய துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2 சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

தக்காளி நன்கு வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். அதற்காக அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நல்ல வதக்கி கொள்ள வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். முட்டைகள் பொடிமாஸ் போல நன்கு புரிந்து வந்ததும் சேவைக்கு ஏற்ப இடியாப்பங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும் மசாலா வைத்து தோசை தானா… வாங்க ஒருமுறை வித்தியாசமாக மசாலா குழிப்பணியாரம் செய்து பார்க்கலாம்!

இடியாப்பங்களை நன்கு உதிர்த்து முதலில் கட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகு முட்டை தயாரானதும் கடாயில் சேர்த்து கைவிடாமல் ஒரு நிமிடம் நன்கு கிளறி கொடுக்க வேண்டும்.
மசாலா, இடியாப்பம் மற்றும் முட்டை அனைத்தும் ஒரு சேரும் விதத்தில் நன்கு கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ் மல்லி இலை சேர்த்து மூடி போட்டு ஒரு நிமிடம் வரை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

ஒரு நிமிடம் கழித்து நெய்யில் வறுத்த பத்து முந்திரி பருப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான இடியாப்பம் கொத்து பிரியாணி தயார். இது மாலை நேர ஸ்நேக்ஸ் ஆக மட்டுமல்லாமல் காலை அல்லது இரவு நேர உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.