எப்போதும் மசாலா வைத்து தோசை தானா… வாங்க ஒருமுறை வித்தியாசமாக மசாலா குழிப்பணியாரம் செய்து பார்க்கலாம்!

சுவையாக மற்றும் சிறப்பாக சாப்பிட வேண்டும் என நினைக்கும் பொழுது நம் மனதில் முதலில் தோன்றுவது மசாலா தோசை தான். சாப்பிட சாப்பிட திகட்டாத தனி சுவையில் நல்ல காரசாரமாக அருமையாக இருக்கும். எப்போதும் மசாலா தோசை சாப்பிட்டு சலித்த நேரங்களில் ஒரு முறை அதை மசாலா வைத்து அருமையான குழிப் பணியாரம் செய்து சாப்பிட்டு பாருங்கள். இந்த வித்தியாசமான சுவையில் மெய்மறந்து மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் விதத்தில் அருமையாக இருக்கும். வாங்க எளிமையான முறையில் மசாலா குழிப்பணியாரம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

முதலில் நான்கு முதல் ஐந்து உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு இரண்டு கொத்து கருவேப்பிலைகளை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு நன்கு வந்ததும் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு மாவு போல மசித்து எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்து கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நாம் நறுக்கி வைத்திருக்கும் மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

தக்காளி நன்கு வதங்கிய பிறகு கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மசித்த உருளைக்கிழங்குகளையும் சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு கலந்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இந்த மசாலா கலவை நன்கு சூடு தணிய ஆரம்பிக்க வேண்டும். மசாலா நன்கு ஆரிய பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது பணியார மாவை தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம். பணியார மாவு இல்லாத பட்சத்தில் தோசை மாவை நன்கு தண்ணியாக கலந்து உப்பு சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரியாணியின் சாயல் இல்லாமல் பாரம்பரிய முறையில் தக்காளி சாதம்! புதுமையான ரெசிபி இதோ…

பணியார கல்லை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக அதில் பாதி குழி அளவிற்கு மாவு சேர்த்து அதன் பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் மசாலா உருண்டைகளை மையப்பகுதியில் வைத்து மேல் பக்கமாக சிறிதளவு மாவு சேர்த்து அப்படியே மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

இரண்டு நிமிடம் நன்கு வெந்த பிறகு மீண்டும் மறுபக்கமாக மாற்றி மீண்டும் வேக வைக்க வேண்டும். இப்படி இன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் குழிப்பணியாரம் தயார்.
இந்த குழி பணியாரம் சாப்பிடுவதற்கு தனியாக சட்னி, சாஸ் என எதுவும் தேவைப்படாது. சாப்பிடும் போது பணியாரத்தில் உள் இருக்கும் மசாலா தனி சுவையை கொடுக்கும்.