பிரியாணியின் சாயல் இல்லாமல் பாரம்பரிய முறையில் தக்காளி சாதம்! புதுமையான ரெசிபி இதோ…

பொதுவாக வீட்டில் தக்காளி சாதம் செய்யும் பொழுது பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பிரியாணியின் அதே சாயலில் செய்வது வழக்கம். பிரியாணி போல இருக்கும் காரணத்தினால் பலரும் விரும்பி சாப்பிட துடங்கினர். ஆனால் இன்று பாரம்பரிய முறையில் சுவையான புளிப்பு நிறைந்த தக்காளி சாதம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். பிரியாணியின் சாயல் இல்லாமல் பக்குவமான முறையில் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக கொடுத்து விடப்படும் தக்காளி சாதம் ரெசிபி இதோ…

ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி தனியா தூள், சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் அடுத்ததாக தக்காளி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த தக்காளி சாதத்திற்கு நல்ல பழுத்த தக்காளிகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தது ஐந்து அல்லது ஆறு தக்காளிகளை பொடியாக நறுக்கி குக்கரில் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி சேர்த்த பிறகு மிதமான தீயில் தக்காளி நன்கு மசிந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதாவது வெங்காயம் மற்றும் தக்காளி ஒன்றாக இணைந்து தொக்கு பதத்திற்கு வர வேண்டும். இப்பொழுது ஊறவைக்க அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். இந்த முறை சாப்பாட்டு அரிசியை பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். அரை மணி நேரம் ஊற வைத்த ஒரு கப் சாப்பாட்டு அரிசியை கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைக்காய் வைத்து எப்போதும் ஒரே மாதிரியாக வருவல் செய்யாமல் ஒருமுறை தொக்கு செய்வதற்கான ரெசிபி இதோ!

ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொடுத்து குக்கரை மூடி விட வேண்டும்.

மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான பாரம்பரியமிக்க தக்காளி சாதம் தயார். இந்த தக்காளி சாதம் செய்வதற்கு மிக எளிமையாக இருப்பதால் குழந்தைகளுக்கு நொடியில் தயார் செய்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் கொடுத்துவிடலாம்.