வாழைக்காய் வைத்து எப்போதும் ஒரே மாதிரியாக வருவல் செய்யாமல் ஒருமுறை தொக்கு செய்வதற்கான ரெசிபி இதோ!

வாழைக்காய் வைத்து எப்போதும் ஒரே மாதிரியாக கூட்டு, பொரியல், அவியல், வருவல் என செய்யாமல் சற்று வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். பொதுவாக வாழைக்காய் வைத்து எளிமையான முறையில் மிக சீக்கிரமாக சமைத்து விடலாம். இதனால் அவசரமாக சிறப்பு உணவு தயார் செய்யும் நேரங்களில் வாழைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முறை ஒரே மாதிரி வாழைக்காய் சமைக்காமல் சற்று வித்தியாசமாக சுவை கூடுதலாக தொக்கு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

ஒன்று அல்லது இரண்டு வாழைக்காய் நன்கு கழுவி சுத்தம் செய்து வட்ட வடிவில் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வட்ட வடிவில் சற்று நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி 65 மசாலா, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து வேண்டும்.

மசாலா தடவிய பிறகு ஒரு நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளலாம். எண்ணெய் சூடானதும் மசாலா தடவி வைத்திருக்கும் வாழைக்காய் பொரித்துக் கொள்ள வேண்டும்.

வாழைக்காய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பாதி அளவு பொரித்து எடுத்தால் போதுமானது. இப்பொழுது பாதி அளவு வெந்திருக்கும் வாழைக்காய் பொறித்து தனியாக ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளலாம்.

அடுத்ததாக கடாயில் மீதம் இருக்கும் அதை எண்ணையில் அரை தேக்கரண்டி சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நல்ல வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக 5 பல் வெள்ளை பூண்டுவை இடித்து சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.. அதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் வதக்கி கொள்ளலாம்.

மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். தக்காளி நன்கு மசிந்து வரும் நேரத்தில் அரை டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

பொங்கலுக்கு வாங்கி வீட்டில் மீதம் இருக்கும் கரும்பு வைத்து அருமையான அல்வா ரெசிபி!

மசாலா நன்கு கொதித்து வாசனை வரும் நேரத்தில் நாம் பொரித்து வைத்திருக்கும் வாழைகாய்களை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைக்காய் சேர்த்த பிறகு மிதமான தீயில் ஒரு நிமிடம் மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு நிமிடம் கழித்து கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான வாழைக்காய் தொக்கு தயார்.

சூடான சாதம், தோசை, சப்பாத்தி இவற்றிற்கு இந்த வாழைக்காய் தொக்கு கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.