பாகற்காய் என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. பாகற்காயில் இருக்கும் சிறப்பான தனி சுவை ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும். மேலும் இந்த பாகற்காய் ருசிக்காக மட்டுமல்லாமல் உடலில் பல ஊட்டச்சத்திற்காகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் பாகற்காய் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உடலில் உள்ள சர்க்கரை அளவு குறைந்து இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பல மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பாகற்காய் வைத்து கிராமத்து முறையில் அரைத்து விட்ட பாகற்காய் புளிக்குழம்பு செய்வதற்கான ரெசிபியில் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் எலுமிச்சை பழ அளவு புளி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். கொதிக்கும் வெந்நீரில் சேர்த்து ஊற வைத்தால் சிறப்பாக இருக்கும்.
அடுத்ததாக இந்த குழம்பிற்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பு, இரண்டு கொத்து கருவேப்பிலை, காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஐந்து முதல் ஏழு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
வறுத்த பொருட்களை தனியாக ஒரு தட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளலாம். அடுத்து அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு கப் சின்ன வெங்காயம், அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தேங்காய் பொன்னிறமாக மாறும் வரை வதக்கினால் போதுமானது.
இப்பொழுது நாம் வதக்கிய அனைத்து பொருட்களையும் ஒரே மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்தி கொள்ளலாம். இதில் நாம் கழுவி சுத்தம் செய்து வட்ட வடிவில் நெருக்கி வைத்திருக்கும் பாகற்காய்களை சேர்த்து வதக்க வேண்டும். பாகற்காய் பாதியளவு வெந்து வரும் வரை வதக்கினால் போதுமானது.
அடுத்ததாக நாம் முதலில் ஊற வைத்திருக்கும் புளியை நன்கு கரைத்து கெட்டியான புளி கரைசல் மட்டும் கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். புளிதண்ணீருடன் பாகற்காய் கலந்து ஒரு கொதி வரும் நேரத்தில் நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலாக்களை சேர்த்து கலந்து கொள்ளலாம்.
முட்டை இல்லாமல், வெல்லம் இல்லாமல், மைதா இல்லாமல் புதுமையான கேக் ரெசிபி!
இதில் கூடுதலாக ஒரு தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள், குழம்பிற்கு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் கலந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மிதமான தீயில் இந்த குழம்பை 10 முதல் 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
15 நிமிடம் கழித்து ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, 5 காய்ந்த வத்தல், இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது சுவையான கிராமத்து ஸ்டைல் பாகற்காய் குழம்பு தயார்.