பொதுவாக மீன் குழம்பு சமைக்கும் பொழுது நல்ல காரம், முறையான புளிப்பு மற்றும் உப்பு சேர்த்து சமைக்கும் பொழுது மட்டுமே மீனின் வாசம் குழம்பில் இல்லாமல் நல்ல மனமாக இருக்கும். இந்த முறை தக்காளி, புளி என எதுவும் சேர்க்காமல் கேரளா முறையில் அசத்தலான மீன் குழம்பு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. புளிப்பு பிடிக்காதவர்களுக்கு இந்த ரெசிபி கூட மிகவும் உதவியாக இருக்கும்.
முதலில் ஒரு சிறிய துண்டு இஞ்சி, காரத்திற்கு ஏற்ப இரண்டு பச்சை மிளகாய், 10 சின்ன வெங்காயம், ஐந்து வெள்ளைப் பூண்டு இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால் ஒன்று இரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். இதில் அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்து நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
வதங்கும் நேரத்தில் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவல், 15 சின்ன வெங்காயம், ஐந்து பல் வெள்ளை பூண்டு, , ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி தனியாத்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
மசாலா பொருட்கள் அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது அரைத்த மசாலா பொருட்களை கடாயில் சேர்த்து குறைந்தது மூன்று நிமிடம் வரை நன்கு வதக்க வேண்டும்.
இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். ஒரு கொதி வரும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய் கீறி சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் புளிப்பிற்காக இரண்டு அல்லது மூன்று மாங்காய் துண்டுகள் சேர்த்து குழம்பை கொதிக்க விட வேண்டும்.
வீட்டில் இருக்கும் எளிமையான மசாலா வைத்து 15 நிமிடத்தில் அருமையான முட்டை தொக்கு!
குழம்பு நன்கு கொதித்து வரும் நேரத்தில் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீன்களை சேர்த்து கிளற வேண்டும். மீன் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் குழம்பு கொதிக்க வைத்து இறக்கினால் போதுமானது.
இறுதியாக ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், ஒரு தேக்கரண்டி கடுகு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கிளறினால் சுவையான தக்காளி மற்றும் புளி சேர்க்காத மீன் குழம்பு தயார்.