பத்தே நிமிடத்தில் வெண்டைக்காய் வைத்து அருமையான முட்டை பொடிமாஸ்!

வளவளப்பு தன்மை இருப்பதன் காரணமாக பலர் இந்த வெண்டைக்காயை ஒதுக்கி வைத்தாலும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் வெண்டைக்காயை சமைத்து சாப்பிட வேண்டும். வளவளப்பு இல்லாமல் சமைக்கும் பொழுது குழந்தைகள் இந்த வெண்டைக்காயை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முறை குழந்தைகளுக்கு கூடுதல் விருப்பம் ஏற்படும் விதத்தில் முட்டை சேர்த்து காரசாரமான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

முதலில் ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி வேர்க்கடலை, காரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது நான்கு காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

மீண்டும் அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் நான்கு வெள்ளைப் பூண்டு பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு கப் பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
வெண்டைக்காய் சேர்த்து மிதமான தீயில் வதக்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளலாம். வெண்டைக்காய் பாதியாக வதங்கி வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது வெண்டைக்காய் முக்கால் பாகம் நன்கு வந்ததும் அதன் நடுவே ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். இதில் முதலில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் இருக்கும் எளிமையான மசாலா வைத்து 15 நிமிடத்தில் அருமையான முட்டை தொக்கு!

முட்டை மற்றும் மசாலா தூள் வெண்டைக்காய் மூன்றையும் ஒரு சேரர் கிளற வேண்டும். இப்பொழுது சுவைக்கேற்ப உப்பு கூடுதலாக தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நிமிடம் வரை கிளறிக் கொடுத்து இறக்கினால் சுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் தயார்.

சூடான சாதத்தில் இந்த வெண்டைக்காய் பொடிமாஸ் வைத்து விரவி சாப்பிடும் பொழுது வேறு எந்த குழம்பு வகைகளும் தேவைப்படாது. மேலும் சாப்பிட சாப்பிட அமிர்தமாக இருக்கும்.