மெரினா கடற்கரையோர மீன் வருவல்… வீட்டிலேயே மணக்க மணக்க மசாலா அரைத்து செய்வதற்கான ரெசிபி இதோ!

கடற்கரை ஓரங்களில் அலைகளின் ஓசையை விட மீன் பொறிக்கும் வாசனை பலருக்கு பிடிக்கும். சுடச்சுட கிடைக்கும் இந்த மீன் வருவல் சாப்பிட சாப்பிட திகட்டாமல் அம்சமான சுவையில் இருக்கும். எவ்வளவு முயற்சித்தாலும் இதே போன்ற சுவையின் வீட்டில் மீன் வறுவல் செய்ய முடியவில்லை என வருத்தப்படுபவர்களுக்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும். கடற்கரையோர கம கம மீன் வருவல் செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்…

இந்த மீன் வருவல் செய்வதற்கு முதலில் மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி அரிசி சேர்த்து நன்கு பொரிந்து வரும் வரை வறுத்து தனியாக ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளவும். மீண்டும் அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி தனியா சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், 10 காய்ந்த வத்தல், இரண்டு கொத்து கறிவேப்பிலை, ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம், ஐந்து துண்டு லவங்கம், இரண்டு துண்டு பட்டை, பத்து பல் வெள்ளை பூண்டு இவற்றை தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

அடுத்து அதே கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.

சிறிது நேரம் கழித்த பிறகு நாம் வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

இது ஒன்று போதும்… இட்லி, தோசை,சப்பாத்தி, கலவை சாதம் என அனைத்திற்கும் அம்சமான பொருத்தமாக இருக்கும்… கத்திரிக்காய் ஊறுகாய் செய்வதற்கான ரெசிபி!

நான் பொடி செய்து வைத்திருக்கும் மசாலாவை சிறிது நேரம் உலர வைத்துவிட்டு காற்று புகாத கண்ணாடி பாத்திரத்தில் பதப்படுத்தினால் ஒரு மாதம் காலம் வரை கெட்டுப் போகாமல் நல்ல வாசனையுடன் இருக்கும்.
இப்பொழுது நமக்கு பிடித்தமான மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் மசாலா கூடுதலாக உப்பு, ஒரு கப் கெட்டி தயிர் அல்லது எலுமிச்சை பழச்சாறு கலந்து நன்கு மசாலாவுடன் பிசைந்து அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து பொறித்து எடுத்தால் கடற்கரை ஓரங்களில் கிடைக்கும் மீன் வறுவல் போல கம கம வாசனை உடன் சுவை அட்டகாசமாகவும் இருக்கும்.