தித்திக்கும் தீபாவளியை மேலும் தித்திப்பாக மாற்றும் இனிப்பு வகைகளில் ஒன்றான அச்சு முறுக்கு செய்வதற்கான ரெசிபி!

தீபாவளி பலகாரங்களை நம் வீட்டில் செய்து உறவினர்கள் மற்றும் பக்கத்தில் இருப்பவர்களுடன் பலகாரங்கள் பரிமாறி கொண்டாடும் பொழுது அதன் மகிழ்ச்சி அளவற்றதாக இருக்கும். இந்த வகையில் இனிப்பு அதிகமாகவும் இல்லாமல் முறுக்கு போல சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும் அச்சு முறுக்கு பலரின் விருப்பமான பலகாரங்களில் ஒன்று. பல நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாத இந்த அச்சு முறுக்கு வீட்டிலேயே எளிமையான செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் பச்சரிசி மாவு, ஒரு கப் மைதா மாவு, அரை கப் அளவிற்கு தூள் செய்த சர்க்கரை சேர்த்து ஒரு முறை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றையும் ஒன்றாக சலித்த பிறகு ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள், ஒரு தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் கலந்து கட்டிகள் விழாத வண்ணம் மாவு கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு குழி கரண்டியை மாவில் உள்ளே விட்டு எடுக்கும் பொழுது கரண்டி முழுவதும் மாவு ஒட்டி தண்ணியாகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் நடுத்தரமான பக்குவத்தில் இருக்க வேண்டும்.

இப்பொழுது மாவு தயாராக உள்ளது. இந்த நேரத்தில் மற்றொரு அகலமான கடாயில் அச்சு முறுக்கு பொறுத்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். அச்சு முறுக்கு செய்யும் கம்பியை ஒரு ஐந்து நிமிடம் கொதிக்கும் எண்ணெயில் அப்படியே வைக்க வேண்டும்.

திருநெல்வேலி ஸ்பெஷல் தீபாவளி பலகாரம் முந்திரி கொத்து! ரெசிபி இதோ…

அதன் பிறகு அந்த அச்சு கொண்டு மாவில் நன்கு மூழ்கச் செய்து முக்கி அதே போல எண்ணெயில் மூழ்க வைக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் அச்சில் இருந்து மாவு தனியாக புரிந்து வரும். அதன் பிறகு அச்சை தனியாக எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது முறுக்கு உண்ணும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்தால் அச்சு முறுக்கு தயார்.

இப்படி நாம் தயார் செய்து வைத்திருக்கும் அனைத்து மாவையும் ஒன்றன்பின் ஒன்றாக பொறித்து எடுக்க வேண்டும். தீபாவளிக்கு சுவையான மற்றும் பல நாள் கெட்டுப் போகாது அச்சு முறுக்கு செய்து பாருங்கள்.