தீபாவளி சிறப்பாக அசத்தல் அசைவ விருந்து… கோயம்புத்தூர் ஸ்பெஷல் அங்கணன் பிரியாணி நம்ம வீட்டிலே செய்யலாம் வாங்க…

பிரியாணி என்றாலே விருந்துதான். அதிலும் விசேஷ நாட்களில் சமைக்கப்படும் பிரியாணிக்கு மவுசு சற்று அதிகமாகவே இருக்கும். வருடங்களில் ஒரு முறை கொண்டாடப்படும் அந்த விசேஷ நாட்களை பிரியாணி சமைத்து கொண்டாடும் பொழுது அதுவும் மேலும் மகிழ்ச்சியை கொடுக்கும் விதத்தில் அமைகிறது. இந்த முறை எப்போதும் போல பிரியாணி செய்யாமல் சற்று பேமஸான பிரியாணியை நம்ம வீட்டில் முயற்சி செய்து பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த அங்கணன் பிரியாணி ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். வாங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் அங்கனன் பிரியாணி வீட்டில் செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்…

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 20 சின்ன வெங்காயம், 10 பல் வெள்ளைப்பூண்டு, காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து பச்சை மிளகாய், 5 முதல் 6 துண்டு இஞ்சிகள் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்தால் போதுமானது.

அடுத்ததாக ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். இதில் ஒரு பிரியாணி இலை, பட்டை இரண்டு துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி, அண்ணாச்சி பூ ஒன்று, கல்பாசி சிறிதளவு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு நிமிடம் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை மிக்ஸி ஜாரில் அரைத்து சாக குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி பழத்தின் பச்சை வாசனை சென்றவுடன் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒன்றரை தேக்கரண்டி பிரியாணி மசாலா, முக்கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை செல்லும் வரை கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கப் கெட்டி தயிர், பாதி எலுமிச்சை பழத்தின் சாறு, கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மசாலா பொருட்கள் ஒரு சேர வதங்கி வாசனை வரும் நேரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

தீபாவளிக்கு காரசாரமான மொறு மொறு தட்டை ரெசிபி!

சிக்கன் மற்றும் மசாலா ஒரு சேரும் விதத்தில் நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு கப் அரிசிக்கு ஒன்னே கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வரும் நேரத்தில் ஊற வைத்திருக்கும் ஒரு கப் பாஸ்மதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசியை சேர்த்துக் கொள்ளலாம்.

மிதமான தீயில் இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினான் சுவையான கோயம்புத்தூர் ஸ்பெஷல் அங்கணன் பிரியாணி தயார்.