எப்போதும் சோயா, மஸ்ரூமில் பிரியாணி செய்து சலித்தவர்கள் ஒரு முறை கத்தரிக்காய் பிரியாணி ட்ரை பண்ணுங்க…

சைவ பிரியர்களுக்கும் எப்பொழுதும் பிரியாணி மீது தனி ஆர்வம் தான். சிக்கன், மட்டன் பிரியாணியின் அதே சுவையில் சைவ பிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகள், மஸ்ரூம், சோயா, பட்டாணி, பன்னீர் என பல வகையான பிரியாணிகளை செய்து அசத்தி வந்துள்ளனர். அந்த வகையில் இன்று சற்று புதுமையாக கத்திரிக்காய் வைத்து அருமையான பிரியாணி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் கத்திரிக்காய் பிரியாணி செய்வதற்கு நல்ல இளம் பிஞ்சு கத்தரிக்காய்களை தேர்வு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 300 கிராம் கத்தரிக்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு கத்திரிக்காயை நான்காக கீறி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் நான்காக கீரி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை எண்ணெயோடு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வேகமாக வதக்கி கத்திரிக்காய் திருத்தி எடுக்கக் கூடாது. மிதமான தீயில் லேசாக பொன்னிறமாக வதக்கினால் போதுமானது. அப்படி பொன்னிறமாக வதக்கிய கத்திரிக்காயை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் மீதம் இருக்கும் அதே எண்ணெயோடு ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ள வேண்டும். இதில் பெரிய துண்டு பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, கல்பாசி சிறிதளவு, பிரியாணி இலை இரண்டு, அண்ணாச்சி பூ ஒன்று சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுது மூன்று பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு புதினா மற்றும் மல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் மற்றும் அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். மிளகாய் தூளில் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு கப் வெட்டி தயிர் சேர்த்துக் கொள்ளலாம். தயிர் சேர்த்த பிறகு சில வினாடிகளில் நன்கு பழுத்த பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

தக்காளி எண்ணெயோடு சேர்த்து நன்கு வசியும்படி கிளறி கொடுக்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்த பிறகு அரை தேக்கரண்டி பிரியாணி மசாலா சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இந்த மசாலாவின் பச்சை வாசனை சென்று நல்ல வாசனை வரும் நேரத்தில் நாம் எண்ணெயில் வதக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை குக்கரில் சேர்த்து மசாலாவுடன் இணைந்து கிளற வேண்டும்.

அட இதுல கூட சட்னி செய்யலாமா என வாயை பிளக்க வைக்கும் சட்னி ரெசிபி! வெண்டைக்காய் சட்னி ரெசிபி இதோ…

இந்த நேரத்தில் பிரியாணிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு இரண்டு கப் வீதம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்த பிறகு அரைமணி நேரம் ஊற வைத்து இருக்கும் பாசுமதி அரிசியை நம் குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்து குக்கரை மூடிவிட வேண்டும்.

மிதமான தீயில் மூன்று விசில்கள் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான கத்திரிக்காய் பிரியாணி தயார். இந்த பிரியாணி பரிமாறுவதற்கு முன்பாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிணறு கொடுத்து பரிமாறினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.