நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க வேண்டுமா? வாரத்தில் இரண்டு முறை முருங்கைக்கீரை கிச்சடி சாப்பிட்டு பாருங்க !

தினமும் மூன்று வேலை சாப்பிட்டாலும் சில நேரங்களில் புத்துணர்ச்சி குறைவாகவும்,சுறுசுறுப்பு குறைவாகவும் சோர்வாக நம் உடல் பலவீனத்தை உணரும். அந்த நேரங்களில் நம் உடலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி தரும் வகையான உணவுகளை தேர்ந்தெடுத்து கவனமாக சாப்பிட்டு வந்தால் உடலை மீண்டும் வலுப்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் முருங்கைக்கீரை உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்களை கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வல்லது. இந்த முருங்கைக்கீரை வைத்து அருமையான கிச்சடி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

இந்த முருங்கைக் கீரை கிச்சடி செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் சாப்பாட்டு அரிசி, ஒரு கப் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அரிசி மற்றும் பருப்பை நன்கு சுத்தம் செய்த பிறகு தேவையான அளவு தண்ணீர் கலந்து 15 முதல் 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அந்த நேரத்தில் ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் நெய் சூடானதும் ஒரு சிறிய துண்டு பட்டை, ஒரு சிறிய துண்டு கிராம்பு, ஏலக்காய் ஒன்று, பிரியாணி இலை ஒன்று சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஐந்து வெள்ளைப்பூண்டு, பொடியாக நறுக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இதை அடுத்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் மூன்று பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாய் எண்ணெயோடு சேர்ந்து வதங்கியதும் ஒரு கப் முருங்கை கீரை நன்கு கழுவி சுத்தம் செய்ததை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

ஒருமுறை சாப்பிட்டால் போதும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் சுவையில் ஆம்பூர் ஸ்டைல் கீமா பிரியாணி!

முருங்கைக்கீரை சேர்த்த பிறகு ஒரு நிமிடம் வரை எண்ணையில் நன்கு கீரையை வதக்க வேண்டும். ஒரு நிமிடம் வதக்கிய பிறகு ஊற வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது பருப்பு மற்றும் அரிசிக்கு ஏற்றார் போல் ஐந்து கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது சுவை பார்க்க வேண்டும். உப்பு சற்று கூடுதலாக இருக்கும் பட்சத்தில் சாதம் வெந்து வரும் நேரத்தில் சுவை அருமையாக இருக்கும்.

மிதமான தீயில் ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்க வேண்டும். குக்கரை திறக்கும் பொழுது மீண்டும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு சாதத்தை மசித்து இறக்கினால் சுவையான முருங்கைக்கீரை கிச்சடி தயார். எப்பொழுதும் ரவா வைத்து கிச்சடி செய்யாமல் இது போன்ற முருங்கைக்கீரை வைத்து அருமையான கிச்சடி செய்யும் பொழுது இந்த கிச்சடி சுவையானதாக மட்டும் இல்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.