வாரத்தில் ஒருமுறை சிக்கன் செய்தாலும் வாரம் முழுக்க சுவை நாவிலே நடனமாடும் திருவனந்தபுரம் சிக்கன் ரெசிபி!

வார விடுமுறை நாட்களில் கண்டிப்பாக அசைவ விருந்து எல்லார் வீட்டிலும் கட்டாயமாக மாறிவிட்டது. பொதுவாக அசைவம் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது மட்டுமின்றி அந்த விடுமுறை நாளும் கொண்டாட்ட நாளாக மாறிவிடுகிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமை சிக்கன் இல்லாத வீடு இருக்க முடியாது. இப்படி வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் சிக்கன் செய்தாலும் ஞாயிற்றுக்கிழமை செய்யும் சிக்கன் தனி சுவைதான். இப்படி விசேஷமாக செய்யும் சிக்கன் எப்போதும் போல அல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்து விரும்புவர்களுக்கு இந்த ரெசிபி.. வாங்க திருவனந்தபுரம் ஸ்டைல் சிக்கன் செய்வதற்கான விளக்கம் இதோ..

இந்த சிக்கன் ரெசிபி செய்வதற்கு அரை கிலோ சிக்கன் நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் சிக்கனை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி சீரகப்பொடி, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

இதனுடன் வாசனைக்காக அரை தேக்கரண்டி கரம் மசாலா பொடி, ஒரு தேக்கரண்டி சில்லி ஃபிளக்ஸ், அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து செய்து கொள்ள வேண்டும். இறுதியாக இந்த கலவையில் பாதி அளவு எலுமிச்சை பல சாறு சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து ஒரு அகலமான கடாயில் சிக்கனை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் சிக்கன் பொன்னிறமாக வெந்து வர வேண்டிய அவசியம் இல்லை முக்கால் பாகம் வெந்தால் போதுமானது.

அப்படி வெந்த சிக்கனை தனியாக ஒரு தட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளவும். மீண்டும் அதே கடாயில் ஒரு கப் பெரிய வெங்காயம் நீளவாக்கில் பொடியாக நறுக்கியது, 10 முதல் 15 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை செல்லும்வரை வதக்கி கொள்ளலாம். இப்பொழுது வெங்காயத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.

அதிக மாவுச்சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கு வைத்து அருமையான காரசாரமான அடை ரெசிபி!

வெங்காயம் கண்ணாடி பதத்தில் நன்கு வதங்கியதும் நாம் பொறித்து வைத்திருக்கும் சிக்கனை இதில் சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளற வேண்டும். இப்பொழுது சுவையான திருவனந்தபுரம் ஸ்டைல் சிக்கன் தயார். இந்த சிக்கனை சூடான சாதத்தில் திரட்டி சாப்பிடும் பொழுது சுவையான சிக்கன் அதனிடையே வெங்காயம் என மாறி மாறி சாப்பிடும் பொழுது அதன் சுவை தனியாகவும் இருக்கும். அசைவு விருந்து சாப்பிடும் பொழுது தனியாக வெங்காயம் சாப்பிடுபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிவிடும்.

மேலும் இந்த திருவனந்தபுரம் சிக்கன் பிரியாணி, தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாகவும் இருக்கும்.