இதுல கூட பிரியாணி செய்யலாமா? வாயை பிளக்க வைக்கும் முருங்கைக்காய் பிரியாணி ரெசிபி இதோ!

பொதுவாக பிரியாணி அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதிலும் சைவ பிரியாணியை விட அசைவ பிரியாணிக்கு மவுசு அதிகம் தான். இருப்பினும் சைவத்திலும் பல வகையான பிரியாணிகள் பிரசித்தி பெற்ற வருகிறது. குறிப்பாக மீல் மேக்கர் பிரியாணி, சுண்டல் பிரியாணி, காய்கறி பிரியாணி என பல வகையான பிரியாணிகள் சைவ பிரியர்களின் மனதில் இடம் பிடித்து இருந்து நிலையில் தற்பொழுது காய்கறிகள் அதாவது நாம் நினைத்துப் பார்க்காத காய்கறி வைத்து கூட பிரியாணி செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆமாங்க முருங்கைக்காய் வைத்து பிரியாணி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு குழி கரண்டி கெட்டி தயிர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த மசாலா கலவையுடன் ஒரு கப் அளவு நீளவாக்கில் நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முருங்கைக்காய் மசாலாவுடன் நன்கு பிசைந்ததும் அரை எலுமிச்சை பழ அளவு சாறு சேர்த்துக் கொள்ளவும். எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து அரைமணி நேரம் மூடி வைக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய், இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை இரண்டு, பட்டை இரண்டு, கிராம்பு 4, ஏலக்காய் 2, அண்ணாச்சி பூ ஒன்று, கல்பாசி சிறிதளவு, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் இரண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் கைபிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

புதினா மற்றும் கொத்தமல்லி இலை எண்ணெயோடு சேர்த்து பாதி வதங்கியதும் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி நன்கு வதங்கி மசிந்ததும் ஊற வைத்திருக்கும் முருங்கைக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.

முருங்கைக்காய் சேர்த்த பிறகு நன்கு ஒரு முறை கலந்து கொடுக்க வேண்டும். இந்த மசாலாவில் கூடுதலாக காரம் தேவைப்பட்டால் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு கப் பார்ப்பது அரிசிக்கு இரண்டு கப் வீதம் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

பாட்டி சமையல் போல கை பக்குவமும், வாசனை, சுவை கிடைக்க உதவும் அருமையான சமையல் டிப்ஸ்கள் இதோ!

நாம் இந்த பிரியாணியை தேங்காய்ப்பால் சேர்த்து உள்ளதால் இரண்டு கப் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம். மீண்டும் ஒருமுறை உப்பு சரி பார்த்து அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக ஒரு முறை நன்கு கிளறி கொடுத்து மிதமான தீயில் குக்கரை மூடி விட வேண்டும். மூன்று விசில்கள் வேக வைத்து இறக்கினால் சுவையான முருங்கைக்காய் பிரியாணி தயார். பிரியாணி பரிமாறுவதற்கு முன்பாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி பரிமாறினால் மேலும் வாசனையாக இருக்கும்.

இது பிரியாணிக்கு கத்திரிக்காய் ரைத்தா, தயிர் வெங்காயம் வைத்து சாப்பிடும் பொழுது அமிர்தமாக இருக்கும்.