அசைவ விருந்து என்றாலே அனைவரும் கட்டாயம் எதிர்பார்க்கப்படும் ஒரு உணவு மட்டன் குழம்பு. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மட்டன் குழம்பு இல்லாவிட்டால் அந்த பண்டிகையே முழுமை அடைந்தது போல் இருக்காது. மட்டன் குழம்பு சாதம் மட்டுமின்றி இட்லி, தோசை, பரோட்டா என அனைத்து வகையான உணவுகளுக்கும் மிக அருமையான சைட் டிஷ் ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு அசைவ உணவு மட்டன் குழம்பு எனலாம். பெரும்பாலும் மட்டன் சமைக்க அதிக நேரம் எடுப்பதாக தோன்றலாம். ஆனால் இது போல் மசாலாக்கள் அரைத்து செய்து பார்த்தால் இதன் சுவை மிக அருமையாக இருக்கும் மேலும் இதை சமைக்கும் பொழுதே வரும் வாசனை வீட்டில் உள்ளோரை கிச்சனுக்கு இழுத்து வந்துவிடும் அதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுப்பதில் தவறில்லை என நீங்களே நினைப்பீர்கள்.
அட்டகாசமான பட்டர் சிக்கன்… நீங்கள் ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே செய்யலாம்!!
மட்டன் குழம்பு செய்ய முதலில் மசாலாவை தயார் செய்து விடலாம். இதற்கு ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் முழு மல்லி, இரண்டு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும். இப்பொழுது 10 வர மிளகாய், 12 சின்ன வெங்காயம், எட்டு பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி அனைத்தையும் சேர்த்து வாசம் வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
வாசம் வந்ததும் இறுதியாக இரண்டு மேசைக்கரண்டி அளவு தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இதனை ஆற வைக்கவும். ஆறிய பின்பு வதக்கிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து முதலில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும் பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் மூன்று மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு இலவங்கம் அண்ணாச்சி பூ ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். 20 சின்ன வெங்காயம் மற்றும் ஒரு பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். 2 பச்சை மிளகாயை நீளமாக கீறி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய நான்கு பெரிய பழுத்த தக்காளிகளை இதனுடன் சேர்ந்து வதக்க வேண்டும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். தேவையான அளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கிலோ அளவு மட்டனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
இப்பொழுது அரைத்த மசாலா விழுதை இதனுடன் சேர்த்து மட்டன் முழுவதும் படும் படி நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூடி வைத்து விடவும். இந்த குழம்பு மிதமான தீயில் ஒரு மணி நேரம் வரை நன்கு கொதிக்க வேண்டும். குழம்பு நன்கு கொதித்ததும் சாதம் அல்லது இட்லி தோசையுடன் சூடாக பரிமாறலாம்.
அவ்வளவுதான் சூடான சுவையான மட்டன் குழம்பு தயார்!!!