கத்திரிக்காய் சாப்பிட பிடிக்காதவர்களுக்கு ரகசியமாக இந்த கத்திரிக்காய் சட்னி வைத்துக் கொடுத்துப் பாருங்கள்! ரெசிபி இதோ…

பெரும்பாலும் பலருக்கு காய்கறிகளில் கத்திரிக்காய் பிடிப்பதில்லை. அதை குழம்பில் சேர்த்தாலும் தனியாக ஒதுக்கி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி இருக்கும் பலருக்கு கத்திரிக்காயில் உள்ள சத்துக்களை கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் அதை வைத்து அருமையான சட்னி ஒன்று செய்யலாம் வாங்க. இந்த சட்னி இட்லி மற்றும் தோசை சூடான சாதத்துடன் பிரட்டி சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். கத்திரிக்காய் சுவையிலேயே அருமையான சட்னி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது 15 முதல் 20 சின்ன வெங்காயம், 10 பல் வெள்ளைப்பூண்டு, காரத்திற்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் பாதியாக வதங்கியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை நீளவாக்கில் நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி நன்கு வெந்து மசிந்ததும் பதமான பிஞ்சு கத்திரிக்காய் 5 நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கத்தரிக்காய் பாதி கைப்பிடி அளவு மல்லி இலை, சிறிய எலுமிச்சை பழ அளவு புளி சேர்த்து வதக்க வேண்டும். மல்லி இலை நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடாயில் கத்திரிக்காய் வெந்து வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். ஐந்து முதல் 7 நிமிடங்களில் கத்தரிக்காய் நன்கு வந்து விடும். அதன் பிறகு இந்த கலவை சூடு ஆரியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சட்னி அரைக்கும்பொழுது தேவைப்பட்டால் மட்டுமே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

வீடு மணக்கும் காரைக்குடி ஸ்பெஷல் செட்டிநாடு கருப்பட்டி பணியாரம்! சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறும் ரெசிபி…

இந்த சட்னிக்கு ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கைப்பிடி அளவு கறிவேப்பிலை, தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.

சாப்பிடும் பொழுது கத்திரிக்காயின் அதை சுவை இருந்தாலும் பார்ப்பதற்கு கத்திரிக்காய் தெரியவில்லை என்ற காரணத்தினால் இதை பிடிக்காதவர்கள் கூட சட்னியின் சுவையில் மயங்கி மெய்மறந்து சாப்பிட்டு விடுவார்கள். அதன் பின் அனைவரின் விருப்பமான சட்னி ஆக இந்த கத்திரிக்காய் சட்னி மாறிவிடும்.