வகை வகையாய் குழம்பு வைக்க முடியாத நேரங்களில்.. ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி! ஒருமுறை செய்து பாருங்கள்!

வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான முறையில்வகை வகையாக பலவிதமான குழம்புகள் வகைகள் செய்ய முடியாத நேரங்களில் வீட்டில் உள்ளவர்களை அசத்தலாக திருப்திப்படுத்த பருப்பு பொடி செய்து பாருங்கள். இந்த ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை அவ்வளவு அருமையாகவும் திருப்தியாகவும் இருக்கும். ஆந்திரா ஸ்டைல் காரசாரமான பருப்பு பொடி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

ஒரு அகலமான கடாயில் ஒரு கப் துவரம்பருப்பு சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் சேர்க்காமல் இந்த பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த பருப்பை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

அடுத்ததாக ஒரு கப் துவரம் பருப்பிற்கு கால் கப் கடலை பருப்பு என்பது கணக்கு. அதன்படி கால் கப் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக கால் கப் பாசிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதே கடாயில் ஒரு தேக்கரண்டி சீரகம், காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஆறு காய்ந்த வத்தல் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதையும் அந்த தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். இறுதியாக ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.

வறுத்த இந்த பொருட்கள் நன்கு சூடு ஆறியதும் ஒரு தேக்கரண்டி பெருங்காயம், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடினமான சமையலை எளிமையாகவும், சுவையானதாகவும் மற்றும் சத்து நிறைந்ததாகவும் மாற்றும் சமையலறை டிப்ஸ்….

இப்பொழுது சுவையான ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி தயார். சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி பருப்பு பொடி, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு பிசைந்து சாப்பிடும் பொழுது சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். மேலும் இந்த பருப்பு பொடியில் பல விதமான பருப்புகள் கலந்திருப்பதால் புரோட்டின் சத்திற்கு குறைவே இல்லை.

இந்த பருப்பு பொடியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.