சாம்பாரா… வேண்டாம் என சொல்பவர்களையும் மீண்டும் மீண்டும் சாப்பிட வைக்கும் உடுப்பி ஸ்டைல் சாம்பார்! ரெசிபி இதோ…

நம் வீடுகளில் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் ஆவது சாம்பார் இருக்கும். இப்படி அதிகப்படியாக சாம்பார் வைக்கும் நேரங்களில் அந்த சாம்பார் ஒரே விதத்தில் செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் மசாலாக்களை வறுத்து அரைத்து உடுப்பி ஸ்டைலில் வைக்கும் பொழுது சாம்பார் சுவையாகவும் வாசமாகவும் இருக்கும். சாப்பிடுபவர்களுக்கும் திருப்தியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். அப்படி உடுப்பி ஸ்டைல் சாம்பார் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….

இந்த சாம்பார் செய்வதற்கு 15 நிமிடத்திற்கு முன்பாக ஒரு கப் துவரம் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். அதன் பின் அதை மீண்டும் ஒருமுறை கழுவி குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் பருப்பிற்கு ஒன்றரை கப் தண்ணீர் வீதம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி விளக்கெண்ணெய், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து இரண்டு விசில்கள் வரும் வரை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி தனியா, கால் தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி கடலை பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, காரத்திற்கு ஏற்ப கர்நாடகா வத்தல் ஐந்து முதல் ஏழு சேர்த்து கொள்ளலாம். இவற்றை நன்கு வாசனை வரும் வரை ஒன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக இந்த கலவையில் ஒரு கப் தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அடுப்பை அணைத்து விடவும். வறுத்த இந்த பொருட்களை நன்கு சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் சாம்பார் வைப்பதற்கு தேவையான காய்கறிகளை நம் விருப்பப்பட்ட வகையில் நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகள் வெந்து வருவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இப்பொழுது காய்கறிகளை மூடி போட்டு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் வெந்து ஒரு கொதி வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம், ஒரு எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

புளி கரைசல் சேர்த்த ஐந்து நிமிடத்தில் அரை தேக்கரண்டி வெல்லம் சேர்த்து கொதிக்க விட வேண்டும். காய்கறிகள் நன்கு வெந்ததும் நாம் வேகவைத்திருக்கும் பருப்பை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா விழுது, குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

பஞ்சு போல மிருதுவான இட்லிக்கு… திருநெல்வேலி ஸ்பெஷல் கார எள்ளு பொடி!

இறுதியாக சாம்பார் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது சாம்பார் நன்கு கொதித்தவுடன் மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி தென்கண்ண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கருவேப்பிலை அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது சுவையான உடுப்பி ஸ்டைல் சாம்பார் தயார். இந்த சாம்பாரை பரிமாறுவதற்கு முன்பாக அரை கைப்பிடி அளவு பொடியாக நறுக்கி சேர்த்து கலந்து பரிமாறினால் வாசமாக இருக்கும். இந்த சாம்பார் இட்லி, , தோசை, சாதம் என அனைத்திற்கும் சிறப்பான பொருத்தமாக இருக்கும்.